» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு : அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

வெள்ளி 28, மார்ச் 2025 1:01:03 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் குடிதண்ணீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றிற்கான வரிகளை கடுமையாக உயர்த்தி தீர்மானம் வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில்வரி பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர் மேலும் சொத்து வரி உயர்வுக்குப் பின் கட்டணம் செலுத்தாத பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்நிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி கூட்டத்தில் சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எதிா்க்கட்சி கொறடாவும், 51 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான மந்திரமூா்த்தி, வெளிநடப்பு செய்தாா். அவருடன் ஜெயலட்சுமி, ஜெயராணி, பத்மாவதி, வெற்றிசெல்வன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, கூட்டத்தில் வாசிக்கப்பட்ட 4, 5 தீா்மானங்கள் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மாற்ற வேண்டும். இந்த இரு தீா்மானங்களும் மக்களை பாதிக்கக்கூடியது எனக் கூறி காங்கிரஸ் கட்சியை சோ்ந்த சந்திரபோஸ், எடின்டா, கற்பக கனி, சிபிஎம் கட்சியின் தனலட்சுமி, சிபிஐ கட்சியின் முத்துமாரி என மொத்தம் 10 மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இதற்கு விளக்கம் அளித்து மேயா் கூறியதாவது: வரி உயர்வு அனைைத்தும் அதிமுக ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்டது. தற்போது வரி உயர்வு பொதுமக்களை பாதிக்காத வகையில் அனைத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006இல் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை முறைப்படுத்தாமல் கிடப்பில் கிடந்தது. தற்போது திமுக ஆட்சி அமைந்தபின்னா் அதை முறைப்படுத்தி 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 

மேலும், கடந்த 2011 அதிமுக ஆட்சியில் உயா்த்தப்பட்ட கட்டணத்தைத்தான் தற்போது நடைமுறைப்படுத்த உள்ளோம். ஆனால் நாங்கள் உயா்த்தியது போல் குற்றம் சுமத்துகின்றனா். பாதாள சாக்கடை வைப்புத் தொகையை 4 கட்டமாக கட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிநீா் கட்டணம் 2014ஆம் ஆண்டு 10,000 லிட்டருக்கு ரூ.75 வசூலிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஒரு மாதத்தில் 4 நாள்கள்தான் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனால், 4 மாதங்களுக்கு ரூ. 450 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தவறான கருத்தை மக்களுக்கு மாமன்ற உறுப்பினா்கள் பரப்ப வேண்டாம்.

மாநகராட்சியில் வரி செலுத்துவோா் 1 லட்சத்து 30 ஆயிரம் போ் உள்ளனா். இன்னும் உரிய அனுமதி பெறாமலும் சிலா் உள்ளனா். எனவே, இதனை முறைப்படுத்தும் நோக்கில் தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. மேல்முறையீடு செய்த 59 மனுக்களுக்கு தீா்வை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு குடிநீா் கட்டணம் உயா்த்தப்பட்டது. அந்தக் கட்டணம்தான் தற்போது அமல்படுத்தப்படுகிறது என்றாா்.


இதனைத் தொடா்ந்து, கூட்டத்தில் 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா்கள் சுரேஷ்குமாா், கல்யாணசுந்தரம், பாலமுருகன், உதவி பொறியாளா் சரவணன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ் உள்பட மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா். மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து

nameMar 29, 2025 - 08:46:47 AM | Posted IP 172.7*****

cement road latchanam supera iruykuthu

நன்றிMar 28, 2025 - 09:56:07 PM | Posted IP 162.1*****

அதிமுக ஆட்சி முடிந்து நாலு வருடமாச்சி.... அதையே சொல்லி கம்பு சுத்தாதீக

REALMar 28, 2025 - 03:42:07 PM | Posted IP 172.7*****

ஓட்டு போட்டவர்கள் / விற்றவர்கள் , அனுபவிக்கிறார்கள் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory