» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 14,65,127 வாக்காளர்கள் : வரைவு பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 1:26:48 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 14,65,127 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(29.10.2024) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்ககப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டார்.
அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 211859 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 282202 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 242272 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 224450 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 247653 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 256691 வாக்காளர்கள் என மொத்தம் 1465127 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், பணித்தொகுதி வாக்காளர்கள் 2706 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் அளிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1627 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 905 வாக்குச்சாவடி அமைவிட பள்ளி/கல்லூரிகளிகளிலும் வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்றிட நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமன அலுவலர்களிடம் அரசு விடுமுறை தவிர்த்து வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேரில் அளித்திடலாம்.
வாக்காளர்களின் நலன் கருதி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். எனினும் 01.01.2025 ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஏப்ரல்-1, ஜீலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய நாட்களில் 18 வயது பூர்த்தியடைந்து தகுதியடையும் விண்ணப்பதாரர்களின் (முன்னதாகவே பெறப்பட்ட) விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தக் காலத்தில் அந்தந்த காலாண்டுகளில் தகுதியடையும் விண்ணப்பங்கள் அந்தந்தக் காலாண்டின் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம் நாட்களில் அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குசாவடி மறுவரையறைக்கு பின்னர் 1627 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடிகள் மாற்றத்திற்குப் பின்னர் இடமாற்றம்/கட்டிட மாற்றம் என 55-ம், பெயர் மாற்றம் 4-ம், ஒரு பகுதியிலிருந்து வாக்காளர்களை மற்ற பகுதிக்கு மாற்றம்; 8-ம், பிழை திருத்தம் 18-ம், பிரிவு மாற்றம் 4-ம், வாக்குச்சாவடி எண்களை மாற்றுதல் 25-ம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், ஐ.ரவி;, எல்.அக்னல், ஜெ.பழனி, ஜி.பாஸ்கர், அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏ.சந்தானம், என்.ஜி.ராஜேந்திரன், பி.சரவணபெருமாள், சிபிஐ சார்பில் பி.கரும்பன், எஸ்.பி.ஞானசேகர், சிபிஎம் சார்பில் டி.ராஜா, பி.ஜே.பி. சார்பில் எல்.கிஷோர்குமார், எஸ்.சிவக்குமார், ஆம் ஆத்மி சார்பில் வே.குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.
AravindkumarOct 29, 2024 - 01:56:29 PM | Posted IP 162.1*****