» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: அதிமுக வேட்பாளர்!

வியாழன் 28, மார்ச் 2024 3:07:11 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தெரிவித்தார். 

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். 

மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 லட்ச ரூபாய் உள்ளது. இதுகுறித்து தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் திமுக வேட்பாளர் மீதான 2 ஜி வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தோம். அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு தங்களுக்கு நன்றாக உள்ளது. போகும் இடங்களில் எல்லாம் கண்கூடாக தெரிகிறது. 

எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கோரம்பள்ளம் குளக்கரை பலப்படுத்தப்படும் மேலும் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கரைகள் உடைப்பு ஏற்படாத அளவுக்கு பலப்படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலாளர்கள் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன். 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்தாலே தங்களது வெற்றி உறுதி என்றும் அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருச்சிற்றம்பழம், வழக்கறிஞர்கள் பிள்ளை விநாயகம், ஆண்ட்ரூஸ் மணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கனிமொழியின் வேட்பு மனு ஏற்பு

திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று பல்வேறு காரணங்களை தெரிவித்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பின்பு திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory