» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீபாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் இசை வெளியீடு
செவ்வாய் 18, ஜனவரி 2022 7:41:11 AM (IST)
தூத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாகம்பிரியாள் பற்றி வீரபாண்டிய புலவர் எனும் சங்கரமூர்த்தி புலவர் இயற்றிய "ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத் தமிழ்" என்ற நூல் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சங்கரமூர்த்தி புலவர் பாகம்பிரியாள் அம்பாளை கடலுடனும், கடல் வாழ் உயிரினங்களுடனும் ஒப்புகை செய்து வர்ணித்து பிள்ளை தமிழ் இயற்றி உள்ளார். இந்த பிள்ளைதமிழ் தற்போது பாடலாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வெள்ளி விழாவின் போது எங்கள் ஊரிது.. எங்கள் உறவிது.. எனும் பாடலுக்கு இசையமைத்த இசை ஆசிரியர் கலைவளர்மணி ம.இசக்கியப்பன் இந்த பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் பாடலை இசையமைத்துள்ளார்.
இதன் வெளியீட்டு விழா தூத்துக்குடி டிஏ திருமண மண்டபத்தில் திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பிள்ளை தமிழ் நூலை அழகர் ஜுவல்லர்ஸ் பத்மநாபன் வெளியிட சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், சங்கரலிங்கம், முத்தாலங்குறிச்சி காமராசு, இளமுருகு ஆகியோர் பெற்றுகொண்டார்.
சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஆலயத்திற்கான இசை குறுந்தகட்டை பெருங்குளம் செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் வெளியிட ஆலால சுந்தர வேத சிவஆகம பாடசாலை முதல்வர் ரா.செல்வம் பட்டர் பெற்று கொண்டார். சொல்லின் செல்வர் ஆசிரியர் சங்கரலிங்கம் நூல் குறித்த விளக்க உரையாற்றினார். ஸ்ரீ சாரதா கலைக்கூடம் மாணவ-மாணவியர் பாடினர் கௌரி ராஜசேகர் வரவேற்புரையை வழங்கினார். குறுந்தகட்டை டிஏ.தெய்வநாயகம் வெளியிட பழனி பெற்றுக்கொண்டார்,
மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அரசு இசைப்பள்ளி சிவகாம செல்வி ஆகியோர் youtubeஇல் வெளியிட தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். வானொலியில் வெளியிட தூத்துக்குடி வானொலி நிலைய பொறுப்பாளர் எம்.ராதாகிருஷ்ணன் மு.வெ.ரா. பெற்றுக் கொண்டார். டி.ஏ.தெய்வ நாயகம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிஎம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளி முத்தையா, வில்லிசைக் கலைஞர் ஜெயலலிதா, சுபா கிராபிக்ஸ் சுப்புராஜ், ராபர்ட் ஜெராக்ஸ் மாரீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிவாஞ்சலி நாட்டியாலயா மாணவிகள் பரதநாட்டியம் நடைபெற்றது.