» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ஒரு லட்சம் ரூபிள் பரிசு : ரஷ்ய அரசு அறிவிப்பு

சனி 11, ஜனவரி 2025 11:39:02 AM (IST)

ரஷ்யாவில் கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளை தொடர்ந்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷிய அரசும் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷியாவில் உயிரிழப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் குறைவு, மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேற்றம் போன்ற காரணங்களால் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றது. 

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் மக்கள்தொகை விகிதத்தை மேலும் கவலை அடையவைத்துள்ளது. ரஷியாவில் வரலாறு காணாத அளவுக்கு கடந்தாண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2024 முதல் பாதியில் வெறும் 5,99,600 குழந்தைகள் மட்டுமே ரஷியாவில் பிறந்துள்ளன. 25 ஆண்டுகள் தரவுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு. இதனை நாட்டின் எதிர்கால பேரழிவு என்று ரஷிய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷியாவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொகையைப் பெறுபவர்கள் 25 வயதுக்குட்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும் கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தப் பெண்களுக்கு 1,00,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ. 81,000) ஊக்கத்தொகை கிடைக்கும்.

இதையடுத்து ரஷியாவின் மக்கள்தொகையை அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து மாகாண அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வையும் பிரசாரத்தையும் முன்னெடுத்துள்ளனர். கரேலியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முழு நேர மாணவிகளாக பதிவு செய்யப்பட்ட 25 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக் கொண்டால் இந்திய மதிப்பின்படி ரூ. 81,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறந்த பிறகு நோய் காரணமாக குழந்தைகள் உயிரிழந்தாலோ அல்லது குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்பது தெரிவிக்கப்படவில்லை. மேலும், ரஷியாவின் பல்வேறு மாகாணங்களில் இதுபோன்ற ஊக்கத்தொகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory