» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எக்ஸ் செயலியை பயன்படுத்தினால் 8,874 டாலர் அபராதம் : பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடி!

சனி 31, ஆகஸ்ட் 2024 4:55:32 PM (IST)

பிரேசிலில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை விதிப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் 8,874 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா அதிபராக பதவியேற்பதை தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா என பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே சமயம், சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் என பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றம் சாட்டினார்.

மறுபுறம், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்தார். அதோடு, பிரேசிலில் 'எக்ஸ்' தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள 'எக்ஸ்' அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் 'எக்ஸ்' சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் 'எக்ஸ்' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி 24 மணி நேரத்திற்குள் 'எக்ஸ்' தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் உத்தரவிட்டார்.

மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் 'எக்ஸ்' செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் 'எக்ஸ்' செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் தெரிவித்தார்.

இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று விமர்சித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory