» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சனி 31, ஆகஸ்ட் 2024 12:35:52 PM (IST)



அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் நோக்கியா, பேபால் மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.

இந்நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டு ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் மாணவ, மாணவியருக்கு கூகுள் உதவியுடன் ஏ.ஐ. தொழில் நுட்பம் பற்றிய பயிற்சி வழங்கப்படும்.

6 நிறுவனங்களுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவானது. இந்நிலையில், தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆய்வகம் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தினால், நான் முதல்வன் திட்டத்தின் வழியே, செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.

இவற்றுடன், ஸ்டார்ட்-அப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை செயல்படுத்துவது மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளில், அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய பல்வேறு துறைகளில் 6 நிறுவனங்களுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதன்படி, சென்னை, கோவை மற்றும் மதுரை நகரங்களில் புதிய நிறுவனங்கள் அமைய கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி முன்னேறுவதற்கான பணியில் சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory