» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கருத்தடை சாதனங்கள் பயன்பாட்டில் தொடர் சரிவு : உலக சுகாதார மையம் எச்சரிக்கை
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 5:23:28 PM (IST)
கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது குறைந்து வருவதால் பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார மையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டு காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.