» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சூடானில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு: 60 பேர் பலி; 10 ஆயிரம் வீடுகள் சேதம்!
புதன் 28, ஆகஸ்ட் 2024 4:59:05 PM (IST)
சூடானில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் பலியாகினர். மேலும் சுமார் 10 ஆயிரம் வீடுகள் அங்கு சேதமடைந்தன.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் போன்றவை நிரம்பி வழிகின்றன. இந்தநிலையில் கிழக்கு பிராந்தியமான அர்பாத்தில் மிகப்பெரிய அணைக்கட்டு ஒன்று அமைந்துள்ளது. சுமார் 2½ கோடி கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணை அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அந்த அணை முழு கொள்ளளவை எட்டியது. எனவே எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் இருந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்தது. அப்போது போர்ட் சூடான் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் அங்குள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்த மீட்பு பணியில் இதுவரை 60 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது.எனவே அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.