» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் விமான விபத்தில் 18 பேர் பலி: படுகாயங்களுடன் விமானி உயிர் தப்பினார்
புதன் 24, ஜூலை 2024 3:34:12 PM (IST)
நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பேர் உயிரிழந்தனர். விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 19 பேருடன் பயணித்த தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சௌர்யா ஏர்லைன்ஸின் CRJ7 (Reg-9NAME) விமானம் இன்று காலை 11.11 மணியளவில் புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி உள்பட குறைந்தது 19 பேர் பயணித்தனர்.
விமானம் ஓடுதளத்தில் வேகமாக மேலே எழும்ப முயன்றபோது திடீரென சறுக்கி, விமான நிலையத்தை ஒட்டியுள்ள காலியிடத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் முழுவதும் தீப்பற்றி எறியத் தொடங்கியது. விமானம் முழுவதும் தீயில் கருகிய நிலையில் கரும்புகை ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் விமானி மனிஷ் ஷக்யா(37) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானத்தில் இறந்தவர்கள் துணை விமானி எஸ். கடுவால், நேபாள பெண் மற்றும் யேமன் நாட்டவர் உள்பட சௌர்யா ஏர்லைன்ஸின் 17 ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஓடுபாதையில் வெடித்துச் சிதறிய விமானத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.