» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபர் போட்டியில் பைடன் விலகல் : கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு!
திங்கள் 22, ஜூலை 2024 10:38:16 AM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளார். மேலும் அவர் தனக்குப் பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (81) களத்தில் இருந்தார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இதன் காரணமாக அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே மிகுந்த அழுத்தம் அளித்து வந்தனர். அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு எதிர்ப்பு வலுத்த சூழலில், அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தனது இல்லத்தில் பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: தற்போது உலகில் வலுவான பொருளாதார நாடாக அமெரிக்கா விளங்குகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் (பைடன் அதிபராக பதவி வகித்த காலம்), ஒரு தேசமாக அமெரிக்கா மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் மறுகட்டமைப்புக்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. எண்ணற்ற அமெரிக்கர்களுக்கு மலிவான கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை வழங்குவது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவளி பெண் நியமிக்கப்பட்டார். தற்போது உலகை வழிநடத்துவதில் அமெரிக்கா சிறந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற நிலையில், முன்னெப்போதும் அமெரிக்கா இருந்ததில்லை. இவை அனைத்தும் அமெரிக்கர்களின் ஆதரவின்றி சாத்தியமாகி இருக்காது.
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் கொள்ளை நோய்த்தொற்று, மோசமான பொருளாதார நெருக்கடியை அமெரிக்கர்கள் ஒன்றாக கடந்து வந்துள்ளனர். அமெரிக்க ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உலகெங்கும் அமெரிக்காவின் கூட்டுறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபராக அமெரிக்கர்களுக்கு சேவையாற்றுவதே எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். அதிபராக எஞ்சிய பதவி காலத்தில் எனது கடமைகள் மீது மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். எனது முடிவு தொடர்பாக நாட்டு மக்கள் இடையே விரைவில் விரிவாக உரையாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வேட்பாளராக கமலா ஹாரிஸ்.
பைடன் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது கமலா ஹாரிஸை துணை அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்பதே எனது முதல் முடிவாக இருந்தது.இந்நிலையில், தற்போதைய அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் காண வேண்டும் என்பதற்கு எனது முழு ஆதரவு மற்றும் ஒப்புதலை வழங்குகிறேன்’ என்றார். கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், அடுத்த அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரை முன்மொழிந்துள்ளார். கட்சியின் தற்போதைய விதிப்படி, அதிபர் வேட்பாளராக வெறொரு நபரை பைடன் கைகாட்ட முடியாது என்றபோதும், அரசியல் ரீதியில் அவருடைய முன்மொழிவு அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பைடனுக்கு பதிலாக புதிய வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 19 முதல் 22-ஆம் தேதி வரை சிகாகோவில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளனர்.இதில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு தேர்தலில் வலுவான சவாலை அளிக்கும் வகையில், மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளரை கட்சியின் சுமார் 4,700 நிர்வாகிகள் இணைந்து தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதும், அதிபர் பைடனின் முன்மொழிவை புறந்தள்ளி, புதிய வேட்பாளரை கட்சி நிர்வாகிகள் தெரிவு செய்வது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு ஒவ்வொரு மாகாணம் வாரியாக கட்சிக்குள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலானவற்றில் பைடனுக்கு ஆதரவு கிடைத்தது.
சுமார் 3,896 கட்சி நிர்வாகிகள் பைடனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்க சமோவா மாகாணத்தில் மட்டுமே அவருக்கு எதிராக வாக்களிக்கப்பட்டது. அதிபர் வேட்பாளராவதற்கு கமலா ஹாரிஸ் பெயருடன், கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மெர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
டிரம்ப் கருத்து
அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலகியது தொடர்பாக சமூக ஊடகத்தில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘நேர்மையில்லாத பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர்’ என்று விமர்சித்துள்ளார்.