» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரதமர் மோடிக்கு எக்ஸ் வலைதளத்தில் 10 கோடி பாலோவர்கள்: எலான் மஸ்க் வாழ்த்து!
சனி 20, ஜூலை 2024 4:35:51 PM (IST)
எக்ஸ் சமூக ஊடகத்தில் 10 கோடிக்கும் அதிகமான பாலோயர்களை கொண்ட பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் அதிக அளவிலான பாலோயர்களை (பின்தொடர்வோர்) பெற்ற உலக தலைவர்களின் வரிசையில் முன்னணி நபராக பிரதமர் மோடி சமீபத்தில் இடம் பெற்றார். அவருடைய இந்த புதிய சாதனைக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். இந்தியாவில், வேறு எந்த அரசியல்வாதியையும் விட அவர் அதிக எண்ணிக்கையிலான பாலோயர்களை கொண்டுள்ளார்.
அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் 10 கோடி பாலோயர்கள் என்ற எண்ணிக்கையை கடந்திருக்கிறார். இதற்காக மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார். இந்நிலையில், எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளர் மற்றும் டெஸ்லா சி.இ.ஓ.வான எலான் மஸ்க், அதிக பாலோயர்களை கொண்ட உலக தலைவரானதற்காக பிரதமர் மோடிக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இந்த வரிசையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு 2.64 கோடி பாலோயர்கள் உள்ளனர். டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் (2.75 கோடி பாலோயர்கள்), அகிலேஷ் யாதவ் (1.99 கோடி பாலோயர்கள்) மற்றும் மம்தா பானர்ஜி (74 லட்சம் பாலோயர்கள்) ஆகியோர் பிரதமர் மோடியை விட பின்தங்கியுள்ளனர்.
உலக தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் (3.81 கோடி பாலோயர்கள்), துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது (1.12 கோடி பாலோயர்கள்) மற்றும் போப் பிரான்சிஸ் (1.85 கோடி பாலோயர்கள்) ஆகியோரை விடவும் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.
உலகளவில் முன்னணியில் உள்ள சில விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்களுடன் ஒப்பிடும்போதும் அவர் அதிக பாலோயர்களை கொண்டுள்ளார்.
விராட் கோலி (6.41 கோடி பாலோயர்கள்), பிரேசில கால்பந்து வீரர் நெய்மர் (6.36 கோடி பாலோயர்கள்) மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (5.29 கோடி பாலோயர்கள்) ஆகிய விளையாட்டு வீரர்களை விடவும், டெய்லர் ஸ்விப்ட் (9.53 கோடி பாலோயர்கள்), லேடி ககா (8.31 கோடி பாலோயர்கள்) மற்றும் கிம் கர்தேஷியன் (7.52 கோடி பாலோயர்கள்) ஆகிய திரை பிரபலங்களை விடவும் அவர் அதிக பாலோயர்களை கொண்டிருக்கிறார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் 3 ஆண்டுகளில் 3 கோடி பயனாளர்கள் என அவர் அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளார். இதுதவிர அவர், யூடியூபில் 2.5 கோடி சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் 9.1 கோடி பாலோயர்களையும் கொண்டிருக்கிறார்.
2009-ம் ஆண்டு எக்ஸ் சமூக ஊடகத்தில் இணைந்த பிரதமர் மோடி, ஆக்கப்பூர்வ பணிகளுக்காக தொடர்ந்து அதனை பயன்படுத்தி வருகிறார். அவர் அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருவதுடன், எண்ணற்ற பொதுமக்களையும் அவர் பின்தொடர்கிறார்.
அவர்களுடன் உரையாடுகிறார். அவர்களுடைய செய்திகளுக்கு பதில் தருகிறார். ஒருவரையும் அவர் தடை செய்ததும் இல்லை. உள்ளார்ந்த மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பதிவுகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டு வரும் அவர், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோரை தன்வசப்படுத்தியும் வைத்திருக்கிறார்.