» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு : தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொலை

திங்கள் 15, ஜூலை 2024 8:30:37 AM (IST)



அமெரிக்காவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவில் வருகிற நவம்பா் மாதம் 5-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் வழக்கம்போல் அந்த நாட்டின் இரு பெரும் கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி களம் காண்கின்றன. அந்த வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இரு கட்சிகளும் அதிபர் தேர்லுக்கான வேட்பாளர்களை முறைப்படி அறிவிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதையொட்டி ஜோ பைடனும், அதிபர் டிரம்பும் தங்கள் கட்சியினரின் ஆதரவை பெற ஒவ்வொரு மாகாணமாக சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென டிரம்ப் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒரு குண்டு டிரம்பின் வலது காதை உரசியவாறு சென்றது. அதைத்தொடர்ந்து டிரம்ப் தனது கையால் வலது காதை மூடியபடி கீழே குனிந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமும், கூச்சல், குழப்பமும் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் மேடையில் ஏறி டிரம்பை சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினர். அங்கிருந்து அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே பிரசார மேடையில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை பாதுகாப்பு படையினர் கண்டனர்.

உடனடியாக பிரசார மேடையை ஒட்டி உள்ள கட்டிடத்தின் மேற்கூரை மீது ஏறிய பாதுகாப்பு படையினர் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அவரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டார். இறுதியில் அந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர் பென்சில்வேனியாவை சேர்ந்த தாமஸ் மேத்யூ ஆவார்.

இதனிடையே டிரம்பை கொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் இன்னும் 2 நாட்களில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் டிரம்ப் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

இந்தசூழலில்தான் டிரம்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இது அமெரிக்கா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சைக்கு பின் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய டிரம்ப், தனது சொந்த சமூக வலைத்தளமான ‘ட்ரூத்’-ல் பதிவு ஒன்றை வெளிட்டார்.

அதில் அவர், "ஏதோ தவறுதலாக நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்தேன். திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. ஒரு துப்பாக்கி குண்டு எனது வலது காதின் மேல் பகுதியை கிழித்தது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. என்ன நடக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். நம் நாட்டில் இதுபோன்ற செயல் நடப்பது நம்பமுடியாதது. கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விரைவாக செயல்பட்டு தன்னை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் கடும் கண்டனம்

இந்நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்கு பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜோ பைடன் "டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. நாம் ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்க வேண்டும்” என கூறினார்.

மேலும், ஜோ பைடன் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் அரசியல் எதிரிகளான இருவரும் என்ன பேசினார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ, பட்லர் நகரத்தின் மேயர் பாப் டாண்டோய் ஆகியோருடனும் ஜோ பைடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர்கள் கண்டனம்

இ்ந்த சம்பவத்தை கண்டித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்புக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதேபோல் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு முன்னாள் அதிபர்களான ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் "என் தந்தைக்காகவும், பென்சில்வேனியாவின் பட்லரில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி. விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ரகசிய சேவை மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்காக நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். அப்பா! இன்றும், எப்போதும் உங்களை நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory