» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீன நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் : கார்கள் சரிந்து 24 பேர் பலி
வெள்ளி 3, மே 2024 12:37:54 PM (IST)
சீனாவில் மலைப்பாதையில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனங்கள் சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இரு வாரங்களாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து முடங்கியுள்ளது. முக்கிய நகரான மெய்சுவிலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெய்சுவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் பெரிய சத்தத்துடன் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. மலைப்பாதையில் உள்ள சாலை மற்றும் அதன் பக்கவாட்டில் ஏற்பட்ட 59 அடி பள்ளத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் உருண்டு விழுந்தன. அடுத்தடுத்து 18 கார்கள் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த தேசிய நெடுஞ்சாலை துறையினர், பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். அவர்களில் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மெய்சு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.