» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட்..?

திங்கள் 29, ஏப்ரல் 2024 3:35:56 PM (IST)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் வாரண்ட் வெளியிடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. 

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. இதனால் உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக ரபா நகரை குறிவைத்துள்ளது. அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கினால் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும். எனவே, உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.இதற்கிடையில் காசா போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இப்போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ மந்திரி யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்றும், இதற்கான கைது வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் வெளியிடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. கைது வாரண்டு பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தயாராகி வருவதை அறிந்து இஸ்ரேல் கவலை அடைந்திருப்பதாக 5 இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேபோல் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கவும் சர்வதேச கோர்ட்டு ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது.நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போர்க்குற்றம், பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து வரும் சர்வதேச கோர்ட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உறுப்பினராக இல்லை. எனவே, இந்த விஷயத்தில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்கா வாதிடுகிறது.

சர்வதேச கோர்ட்டின் அதிகார வரம்பை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. அத்துடன் விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுத்துவிட்டது. ஆனால், காசா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளுக்கு அதிகார வரம்பு இருப்பதாக சர்வதேச கோர்ட்டு கூறுகிறது.


மக்கள் கருத்து

Tamilanமே 2, 2024 - 04:27:03 PM | Posted IP 172.7*****

ரஷ்யா பிரதமர் கைது செய்ய படுவாரா?????

இந்தியன்Apr 29, 2024 - 07:02:57 PM | Posted IP 172.7*****

சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் பற்றி கண் தெரியாதாம். அந்த சர்வதேச முட்டாள் நீதிமன்ற தலைவன் தீவிரவாதி ஆதரவாளராக இருப்பான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors

CSC Computer Education






Thoothukudi Business Directory