» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் அசத்தும் தமிழக பேராசிரியர்கள்!

திங்கள் 4, மார்ச் 2024 4:33:24 PM (IST)

ஓமன் நாட்டில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த . ந. அரவிந்த் மற்றும் கல்லூரி புல முதல்வர் ஆ. வல்லவராஜ் போன்றோர் உட்பட ஏழுபேர் கொண்ட குழுவினர் இந்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளனர்.
 
ந. அரவிந்த் ஓமன் தேசத்தில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில், அமைப்பியல் பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் இரு நூல்களையும், தமிழில் ‘உடல் குறள் உறைவிடம்’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு என்ற கிராமம்.
 
இழுவிசையை தாங்குவதற்காக கற்காரையெனும் காங்கிரீட்டிற்குள் போடும் இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மரத்தின் பதப்படுத்தப்பட்ட மட்டைகளை பயன்படுத்தலாம் என்ற புதுமையான கண்டுபிடிப்பிற்காக எங்களுக்கு இந்திய அரசாங்கம் பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த காப்புரிமையை வழங்கியுள்ளது.

ஓமன் தேசத்தின் தேசிய மரம் பேரீச்ச மரமாகும். இங்கு உள்ள கோடிக்கணக்கான மரங்களில் இருந்து வீணாகும் மட்டைகளை கம்பிகளுக்கு மாற்றாக உபயோகப்படுத்தலாம் என்று பேராசிரியர் ஆ. வல்லவராஜ் யோசனை வழங்கினார். இந்த ஆய்வக பரிசோதனைகளுக்காக ஓமான் அரசாங்கம் எங்களுக்கு ஆராய்ச்சி மானியம் தந்தது. இந்த பேரீச்ச மர மட்டைகள் 18 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவற்றை சிறிய கட்டிடங்கள், வாகன கொட்டகை கட்டுவதற்கும் மற்றும் தண்டவாளத்திற்கு அடியில் போடப்படும் காங்கிரீட்டால் ஆன குறுக்குச் சட்டங்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம். 

இதனுடைய வலிமையை கண்ணாடி இழை வலுவூட்டப்பட்ட பல்படிமத்தினை (Glass Fibre Reinforced Polymer) வேதிப்பொருள் கலந்த கோந்து (epoxy resin) துணையுடன் சுற்றி ஒட்டுவதன் மூலம் அதிகப்படுத்தினோம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட காங்கிரீட் சட்டங்களானது கம்பிகள் போடாத சட்டங்களைவிட 42 சதவீதம்வரை சுமைகளை கூடுதலாக தாங்கியது. இது துரு பிடிக்காது மற்றும் செலவும் குறைவு. 

இந்தோனேசியா போன்ற நாடுகளில் மூங்கில் குச்சிகளை இதே முறையில் பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆராய்ச்சியானது, கட்டுமான துறையில் பேரீச்ச மரங்கள் நிறைந்த நாடுகளான வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறோம். இந்த ஆராய்ச்சியில் ஓமன் நாட்டை சேர்ந்த 3 மாணவர்களும், ஆய்வக பயிற்றுவிப்பாளர் இமான் மற்றும் ராணி பாண்டியன் போன்றோரும் ஈடுபட்டுள்ளனர். 

அதுபோல் இளம் கண்டுபிடிப்பாளர்களை மேம்படுத்தும் நோக்கில் 'காப்புரிமை பாதுகாப்பு உத்திகள்' என்ற தலைப்பில் சென்னையில் உள்ள ‘இந்திய அறிவுசார் உடைமை’ (IP India) அலுவலகத்தில் பணிபுரியும் இயந்திரவியல் துறையை சார்ந்த காப்புரிமை துணை கட்டுப்பாட்டாளர் எஸ். உதய ஷங்கர் அவர்கள் வழங்கிய ‘விழிப்புணர்வு பயிற்சி திட்டம்’ எங்களுக்கு காப்புரிமை விண்ணப்பிக்க மிகவும் ஊக்கத்தை தந்தது மட்டுமின்றி உதவியாகவும் இருந்தது. இவர்கள் தவிர ந. கண்ணபிரான் மற்றும் சி. மணிகண்டன் போன்றோர் காப்புரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க உதவினர். காப்புரிமை பெற்ற அனைவரையும் பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory