» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: 10 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி!!
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 11:49:22 AM (IST)
காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகினர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் நீடித்து வந்தது. இந்த பாலஸ்தீனம் மேற்கு கரை மற்றும் காசா என இரு பகுதிகளாக உள்ளன. இதில் காசா பகுதி ஹமாஸ் அமைப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பினரை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
இதற்கிடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் பிணை கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போரை அறிவித்தது. 4 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 28 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குறிப்பாக எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரில் மட்டும் 23 லட்சம் பேர் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது.ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை இந்த போர் தொடரும் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்துள்ளார்.
இதற்கிடையே ரபா நகரில் ஏராளமான ஹமாஸ் அமைப்பினரும் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே அங்கு தங்கியுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் நேற்று ரபா நகரை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.