» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் டிரோன் மீது ரஷிய போர் விமானங்கள் தாக்குதல்!
புதன் 15, மார்ச் 2023 11:21:18 AM (IST)
கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் மீது ரஷிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க பல்வேறு ஆயுதங்கள் மற்றும் உதவிகளை அளித்து வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷியா, துருக்கி, பல்கேரியா, உக்ரைன் எனப் பல்வேறு நாடுகளுக்கு எல்லையாக கருங்கடல் இருக்கும் நிலையில், இப்பகுதியை ரஷியா தனது அதிகார மையமாக கட்டுக்குள் வைத்துள்ளது.
அமெரிக்காவுக்கு கருங்கடல் எல்லை இல்லை என்றாலும், நேட்டோவில் உள்ள நட்பு நாடுகளை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கருங்கடலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச கடல் எல்லையில் அமெரிக்காவின் எம்.க்யூ-9 வகை அதிநவீன டிரோன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ரஷியாவின் சுகோய்-27 போர் விமானங்கள் இடைமறித்து டிரோன் மீது பலமாக மோதி அழித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள அமெரிக்கா, ரஷியாவின் செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரஷியாவின் இரண்டு போர் விமானங்களும் சிறிய சேதங்களுடன் தப்பித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஷிய தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோனை முதல் முறையாக ரஷிய போர் விமானம் நேரடியாக தாக்கி அழித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்தன்Mar 17, 2023 - 10:32:23 PM | Posted IP 162.1*****