» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மராட்டியத்தில் விஷச் சாராயம் குடித்த 14 பேர் பரிதாப பலி - 5 பேர் கவலைக்கிடம்: 8 பேர் கைது!

சனி 30, மே 2026 8:57:44 AM (IST)

மராட்டிய மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹடப்சர் மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள புகேவாடி ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதில் புகேவாடி பகுதியைச் சேர்ந்த 10 பேரும், ஹடப்சரில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பாண்டுரங் சதாசிவ் புகே (57), விஜய் பிரகாஷ் ரத்தோடு (31), ராஜேந்திர பிரகாஷ் ரத்தோடு (34), ராஜேஷ் ராஜ்புத் (51), அக்பர் பதான் (52), ஆனந்த் பாண்டுரங் தேசாய் (60), ஆனந்த் காசிநாத் நிகால்ஜே (70), பாபா சேக் (42) மற்றும் ஹடப்சரைச் சேர்ந்த ராகுல் சரத் (45), விஜய் முகுர்லால் (45), அருண் தாதர், அசோக் ரமேஷ் சவான் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புகேவாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 பேர் பிம்ப்ரி சிஞ்ச்வாட் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்த புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் போலீஸ் கமிஷனர்களுக்கு மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கள்ளச்சாராய கும்பலை முற்றிலும் ஒழிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் உள்ள ஒட்டுமொத்த கும்பலையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். கள்ளச்சாராய வேர்களை முற்றிலும் ஒழிப்போம். இந்த கள்ளச்சாராயம் மெத்தனால் போன்ற நச்சுப் பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே, ஹடப்சர் மற்றும் புகேவாடி பகுதிகளுக்கு கள்ளச்சாராயத்தை சப்ளை செய்த முக்கிய குற்றவாளியான யோகேஷ் வான்கடே என்பவரை மாநில கலால் துறையினர் அதிரடியாகக் கைது செய்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யோகேஷ் வான்கடே, அதிக போதைக்காக சாராயத்தில் அதிகளவில் 'மெத்தனால்' என்ற நச்சு ரசாயனத்தைக் கலந்தது தெரியவந்துள்ளது. அவர் புனே உருளி காஞ்சன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, சாராயத்தில் சுமார் 215 லிட்டர் மெத்தனாலைக் கலந்து புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதிகளுக்கு சப்ளை செய்துள்ளார். இதனை குடித்தவர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல், மயக்கம், வாயில் நுரை தள்ளுதல் மற்றும் இதயத் துடிப்பு குறைந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் புனேயில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஹடப்சர் பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த கள்ளச்சாராயக் கடையை தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி எம்.எல்.ஏ. ரோகித் பவார் மற்றும் அக்கட்சித் தொண்டர்கள் நேரில் சென்று அடித்து நொறுக்கித் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory