» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குத் தொடர்பு: முக்கிய தடயங்களைச் சேகரிப்பு

புதன் 12, நவம்பர் 2025 11:14:39 AM (IST)



டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சாலையில் வெடித்து சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற் கொலை தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதுகுறித்து டெல்லி போலீசார் கூறும்போது, "டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது. தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்ட உமர் முகமது நபி உட்பட கைதான அனைத்து மருத்துவர்களும் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்க ளாக இருந்துள்ளனர். புனிதமான மருத்துவத் தொழிலில் கலந்திருந்த தீவிரவாத மருத்துவ கும்பல், உளவுத் துறையின் எச்சரிக்கையால் சிக்கி உள்ளது" என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

காஷ்மீரில் சோதனை: காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் முகமது நபியின் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அவரது தந்தை குலாம் நபி கைது செய்யப்பட்டார். தாய் மற்றும் 2 சகோதரர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். உமரின் நெருங்கிய நண்பர் மருத்துவர் சாஜித், காஷ்மீரின் புல்வாமாவில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புஉள்ளது. அவரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

ஹரியானாவில் அல் பலா மருத்துவக் கல்லூரியில் கைதான பெண் மருத்துவர் ஷாகினின் அண்ணன் பர்வேஷ் அன்சாரி, உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் தலைமறைவாகி விட்டார். அவரது வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். 

அப்போது ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல் ஆக செயல்பட்டு உள்ளனர். உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் உள்ள மதரசாவில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரூ.10 லட்சம் இழப்பீடு: 

டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். நிரந்தர உடல் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டெல்லி வீட்டில் நேற்று காலை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி, காஷ்மீரை சேர்ந்த காவல் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை, உளவுத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது, "டெல்லி குண்டுவெடி ப்பில் தொடர்புடையவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory