» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறி 10 பேர் பலி; நாடு முழுவதும் உஷார்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:06:38 AM (IST)

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மீது சிறப்பு கவனம் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் இருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நிலைகுலைந்து போயினர்.
இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு பணி துரிதமாக நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறி இறந்தனர். அவர்களது விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. காயம் அடைந்தவர்கள் அதன்மூலம் எடுத்துச்செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் வெடித்துச் சிதற காரணம் என்ன? என்று தெரியவில்லை. பேட்டரி கோளாறுகளால் வெடித்ததா? அல்லது கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதா? என கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ அணைத்து முடிக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.), தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷாவை தொடர்புகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சா கூறுகையில், ‘டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் மாலை 6.52 மணிக்கு மெதுவாக சென்ற கார் திடீரென வெடித்து சிதறியுள்ளது. அந்த சமயத்தில் அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்தது. அந்த காரில் வெடிபொருட்கள் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

ஒரே நாளில் 180 விமானங்கள் ரத்து: பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:49:08 PM (IST)

இந்தியாவில் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும்: நிதின் கட்காரி தகவல்
வியாழன் 4, டிசம்பர் 2025 5:33:58 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி: தர்மேந்திர பிரதான்
வியாழன் 4, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்புமுனை - ராம்நாத் கோவிந்த் பேச்சு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:16:19 AM (IST)









