» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!

சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)



உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், இந்தியாவில் இருப்பது நமக்கு பெருமை என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினம் (தேசிய ஒற்றுமை தினம்) நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குஜராத் மாதம் கேவடியாவில் உள்ள படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு நடந்த பிரமாண்ட அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் ஒற்றுமைக்கு மொழி ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது. நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளும், பேச்சு வழக்குகளும் அதன் வெளிப்படையான மற்றும் படைப்பு சிந்தனையை அடையாளப்படுத்துகிறது.

அதனால்தான் இந்தியா மொழியியல் ரீதியாக இவ்வளவு வளமான நாடாக மாறியுள்ளது. நமது மொழிகள், வெவ்வேறு இசைக் குறிப்புகளைப் போலவே, நமது அடையாளத்தையும் வலுப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் இந்தியாவில் உள்ளது என்று நாம் பெருமையுடன் கூறுகிறோம். சமஸ்கிருதம் போன்ற அறிவுப்பொக்கிஷமும் நம்மிடம் உள்ளது.

வரலாற்றை எழுதுவதில் நேரத்தை வீணாக்குவதை விட, வரலாற்றை உருவாக்குவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என படேல் நம்பினார். அதன்படியே 550-க்கும் மேற்பட்ட நிஜாம்களை இணைப்பது சாத்தியமில்லாதது என கருதப்பட்ட பணியை சுதந்திரத்துக்குப்பின் செய்து முடித்தார். அவர் எடுத்த முடிவுகளை செயல்படுத்தி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற சிந்தனை அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதன்படியே ஒட்டுமொத்த காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற ஜவகர்லால் நேரு அனுமதிக்கவில்லை. அதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, தனி அரசியல்சாசனமும், கொடியும் அதற்காக உருவாக்கப்பட்டது. காங்கிரசின் அந்த தவறால் பல பத்தாண்டுகளாக நாடு அவதிப்பட்டது.

படேலை பொறுத்தவரை நாட்டின் இறையாண்மையே அனைத்தையும் விட மேலானதாக இருந்தது. ஆனால் அவரது மரணத்துக்குப்பின் அமைந்த அரசுகள், நாட்டின் இறையாண்மையில் அந்த தீவிரத்தை காட்டவில்லை.

காஷ்மீரில் செய்த தவறால் வடகிழக்கிலும் பிரச்சினைகள் உருவாகின. நக்சலைட்டு-மாவோயிஸ்டு பயங்கரவாதம் நாடு முழுவதும் பரவியது. இது நாட்டின் இறையாண்மைக்கு தீவிர சவாலாக மாறியது.

சர்தார் படேலின் கொள்கைகளுக்கு பதிலாக அப்போதைய அரசுகள் ஒரு முதுகெலும்பில்லாத அணுகுமுறையை கையாண்டன.

காங்கிரசின் பலவீனமான கொள்கைகளால் காஷ்மீரின் ஒரு பகுதி, பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்கிரமிப்பின் கீழ் சென்றுவிட்டது. பின்னர் அரசு ஆதரவு பயங்கரவாத தளமாக அது மாறியது.

இப்போதும் பயங்கரவாதத்துக்கு காங்கிரஸ் எப்போதும் அடிபணிகிறது. படேலின் தொலைநோக்கு பார்வையை அது மறந்து விட்டது.

ஆனால் நாங்கள் மறக்கவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ஐ உடைத்து ஒட்டுமொத்த காஷ்மீரையும் நாட்டின் மைய நீரோட்டத்தில் இணைத்து விட்டோம். பாகிஸ்தானும் இன்று இந்தியாவின் உண்மையான வலிமையை தெரிந்து கொண்டது.

இந்தியாவை தீமையின் கண் கொண்டு யாரும் பார்த்தால், நாங்கள் அவர்களின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து அவர்களை அழித்து விடுவோம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஒட்டுமொத்த உலகும் பார்த்தது. இதுதான் சர்தார் படேலின் இந்தியா. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory