» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரபேல் போர் விமானத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பயணம் மறக்க முடியாத அனுபவம்: ஜனாதிபதி மகிழ்ச்சி!

வியாழன் 30, அக்டோபர் 2025 8:20:13 AM (IST)



ரபேல் போர் விமானத்தில்  700 கி.மீ. வேகத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம் தயாரித்த போர் விமானம், ரபேல். 5 ரபேல் போர் விமானங்கள், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விமானங்கள், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன.

கடந்த மே 7-ந் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதில், ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரபேல் போர் விமானத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பயணம் செய்தார். இதற்காக அவர் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, ‘ஜி-சூட்’ எனப்படும் சிறப்பு உடைகளையும், சன் கண்ணாடியும் அணிந்தார். ஹெல்மெட்டும் எடுத்துக் கொண்டு, ரபேல் விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.

ஏணியில் ஏறி உச்சியை அடைந்த அவர், ரபேல் போர் விமானத்தின் முதலாவது இந்திய பெண் விமானி என்ற பெருமையை பெற்ற ஷிவாங்கி சிங்குடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரபேல் விமானத்தை குரூப் கேப்டன் அமித் கெஹானி இயக்கினார். விமானம் புறப்படுவதற்கு முன்பு, விமானத்துக்குள் இருந்தபடி ஜனாதிபதி கையசைத்தார்.

பின்னர், ரபேல் போர் விமானம் புறப்பட்டு மேலே பறக்கத் தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் ஜனாதிபதி பயணம் செய்தார். மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் பறந்தார். சுமார் 30 நிமிடம் பயணம் செய்த பிறகு, ஜனாதிபதி சென்ற ரபேல் போர் விமானம், அம்பாலா விமானப்படை நிலையத்துக்கு திரும்பி வந்தது. ஜனாதிபதி சுமார் 200 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார்.

பின்னர், பார்வையாளர் புத்தகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது கருத்தை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானத்தில் எனது முதலாவது பயணத்துக்காக அம்பாலா விமானப்படை நிலையத்துக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரபேல் விமான பயணம் எனக்கு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு திறன்கள் மீது பெருமையான உணர்வை புதுப்பித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங், மற்றொரு விமானத்தில் பயணம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அசாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் பயணம் செய்தார். எனவே, 2 போர் விமானங்களில் பயணம் செய்த ஒரே இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த2006-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், 2009-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதிபா படேல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory