» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் செரியன் மறைவு : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 27, ஜனவரி 2025 12:09:43 PM (IST)
புகழ்பெற்ற அறுவைச் சிகிக்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய மருத்துவர் கே. எம். செரியன். கேரளாவை சேர்ந்த இவர், வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; "நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.எம். செரியனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இருதய மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் மகத்தானது. புதுமை, தொழில்நுட்பம் மீதான கே.எம்.செரியனின் முக்கியத்துவம் தனித்து நிற்கிறது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன" என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்றவருமான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இதயப் பராமரிப்பில் அவரது முன்னோடிப் பணி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் பலருக்கு உத்வேகம் அளித்தது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.
சென்னை பெரம்பூரிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல் முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.