» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை!

திங்கள் 20, ஜனவரி 2025 3:59:12 PM (IST)



கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத் துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின. மறுபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.

அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. 

அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியால்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 

மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார். அவருக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி இன்று தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதி, அதன்பின் தண்டனையை அறிவித்தார். பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்கவேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory