» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோசடி அழைப்புகள் : +8, +85, +65-ல் தொடங்கும் எண்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை!

வியாழன் 26, டிசம்பர் 2024 11:35:50 AM (IST)

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப மோசடிகளும் நாளுக்குநாள் புதுப்புது விதத்தில் உருவெடுத்து வருகின்றது. தற்போது சர்வதேச எண்களில் இருந்து ஒருவருக்கு தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அரசு அதிகாரிகளைப் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ”சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பை அக்டோபர் 22 அன்று தொலைத் தொடர்புத் துறை அறிமுகம் செய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி அழைப்புகள், அதாவது சர்வதேச எண்களில் இருந்து இந்திய எண்களை தொடர்பு கொண்ட 90 சதவிகிதம் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச எண்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் முறையை கையாண்டு வருகிறார்கள். அதனால், அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் 'சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் புகார் அளிக்க வேண்டும்.

+91 இல் தொடங்காமல் +8, +85, +65 போன்ற எண்களில் தொடங்கும் சர்வதேச எண்களிலிருந்து அழைத்து அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற அழைப்புகளை தடுப்பதற்காக தொலைத் தொடர்பு துறை பிரத்யேகக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

தற்பொது ஏர்டெல் நிறுவனம் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை சர்வதேச அழைப்பு என்று குறிப்பிடும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. பிற நிறுவனங்களும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மோசடி அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ‘காலர் ட்யூன்’ மற்றும் குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு அளிக்க தொடங்கியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory