» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தியேட்டர் நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!
வெள்ளி 13, டிசம்பர் 2024 4:39:17 PM (IST)
"புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரினால் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து ஹைதராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.