» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செஸ் சாம்பியன்ஷிப்பில் புதிய சரித்திரம் படைத்தார் தமிழக வீரர் குகேஷ் : பிரதமர் வாழ்த்து!!
வெள்ளி 13, டிசம்பர் 2024 8:46:13 AM (IST)
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனும், கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெறுபவரும் மோதுவார்கள். அந்த வகையில் இந்த தடவை நடப்பு சாம்பியனான 32 வயதான சீனாவின் டிங் லிரெனுடன் மோதும் வாய்ப்பை கேன்டிடேட் போட்டியில் வெற்றி கண்ட இந்தியாவின் குகேஷ் பெற்றார்.
லிரென் - குகேஷ் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இது மொத்தம் 14 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7½ புள்ளியை எட்டும் வீரரை உலக சாம்பியன் கிரீடம் அலங்கரிக்கும்.
ஒவ்வொரு சுற்றிலும் முதல் 40 நகர்த்தலுக்கு இரு வீரருக்கும் தலா 2 மணி நேரமும், அதன் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும், அத்துடன் 40-வது நகர்த்தலுக்கு பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடிகள் கூடுதலாகவும் வழங்கப்படும். இது தான் கிளாசிக்கல் வடிவிலான இந்த போட்டியின் விதிமுறையாகும்.
உலகம் முழுவதும் செஸ் ஆர்வலர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த போட்டியில் 13 சுற்று முடிந்த போது இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். அதாவது முதல் மற்றும் 12-வது சுற்றில் லிரெனும், 3-வது மற்றும் 11-வது சுற்றில் தமிழகத்தின் குகேசும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் டிரா ஆனது.
இந்த நிலையில் பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 14-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நேற்று அரங்கேறியது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களம் இறங்கினார். லிரென் குதிரையை எடுத்து வைத்தும், குகேஷ் ராணிக்கு முன் சிப்பாயை 2 கட்டம் நகர்த்தியும் சவாலை தொடங்கினர்.
குகேஷ் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்டார். துரிதமாக காய்களை நகர்த்தினார். லிரென் தடுப்பாட்ட யுக்தியில் கவனம் செலுத்தினார். 30-வது நகர்த்தலில் ராணியை பரஸ்பரமாக விட்டுக்கொடுத்த போது, குகேஷ் எதிராளியின் சிப்பாயை கூடுதலாக சாய்த்தார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். 35-வது நகர்வு முடிந்திருந்த போது குகேஷ் வசம் 51 நிமிடங்கள் இருந்தது. லிரெனிடம் 18 நிமிடங்கள் மட்டுமே இருந்தது.
ஆட்டத்தை டிராவுக்கு இழுக்க வேண்டும் என்பதே லிரெனின் நோக்கமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் இதே போல் லிரென் கடைசி சுற்றை டிரா செய்து ஆட்டத்தை டைபிரேக்கருக்கு கொண்டு சென்று அதில் வாகை சூடினார். அவரின் சூட்சுமத்தை புரிந்து கொண்ட குகேஷ் வெற்றியை குறி வைத்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் யானை மற்றும் பிஷப் ஆகியவற்றை வெட்டுக்கு வெட்டு என்று கொடுக்க லிரென் முன்வந்த போது அதை குகேஷ் சாதுர்யமாக தவிர்த்தார். இதனால் லிரென் கடும் அழுத்தத்திற்கு உள்ளானார்.
ஆட்டம் 4 மணி நேரத்தை தாண்டியும் நீடித்ததால் பரபரப்பு தொற்றியது. இறுதியில் 55, 56 மற்றும் 57-வது நகர்த்தலின் போது இருவரும் தங்களிடம் இருந்த யானை மற்றும் பிஷப்பை வெட்டிச் சாய்த்தனர்.
அப்போது லிரெனிடம் ராஜா மற்றும் ஒரு சிப்பாயும், குகேஷிடம் ராஜா மற்றும் இரண்டு சிப்பாயும் கைவசம் இருந்தன. எப்படி பார்த்தாலும் ஒரு சிப்பாயை இருவரும் பரஸ்பரமாக விட்டுக்கொடுத்தாலும் எஞ்சிய ஒரு சிப்பாயை கடைசி கட்டம் வரை நகர்த்தி குகேஷ் அதை சக்திவாய்ந்த காயான ராணியாக மாற்றி வெற்றிக்கனியை பறித்து விடுவார். இதை உணர்ந்த லிரென் 58-வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து குகேஷ் வெற்றியை வசப்படுத்தி அதற்குரிய ஒரு புள்ளியை பெற்றார். 14-வது சுற்று முடிவில் குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் லிரெனை தோற்கடித்து புதிய உலக சாம்பியனாக உருவெடுத்தார். வெற்றி பெற்றதும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் குகேஷ் ஆனந்த கண்ணீர் விட்டார். அதன் தொடர்ச்சியாக அரங்கில் இருந்த ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினர்.
18 வயதான குகேஷ், செஸ் உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன்பு ரஷியாவின் கேரி காஸ்பரேவ் 1985-ம் ஆண்டில் தனது 22 வயதில் கோப்பையை வென்றதே சாதனையாக இருந்தது. அதை குகேஷ் முறியடித்துள்ளார்.
இந்திய தரப்பில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ருசித்த 2-வது வீரர் ஆவார். ஏற்கனவே தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மகுடம் சூடிய குகேசுக்கு ரூ.11½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது. 2-வது இடம் பெற்ற லிரென் ரூ.9¾ கோடியை பெற்றார். இன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் அவருக்கு கோப்பை வழங்கப்படும்.
பிரதமர் மோடி வாழ்த்து!
அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்கு குகேஷ்க்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு. அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த குகேஷ் மேல்அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். 12-வது வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய அவர் இப்போது பதின் பருவத்திலேயே உலக சாம்பியனாகி ஒட்டுமொத்த செஸ் உலகின் கவனத்தை தன் மீது திருப்பி இருக்கிறார். இவரது பெற்றோர் ரஜினிகாந்த் - பத்மா டாக்டர் ஆவார்கள்.