» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்பு: பிரதமர் மோடி வெளியிட்டார்!
புதன் 11, டிசம்பர் 2024 5:48:05 PM (IST)
தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் இந்த தொகுப்பு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாகும். பரமத்தி வேலூரைச் சேர்ந்த 81 வயதான சீனி. விசுவநாதன் கடந்த 64 ஆண்டுகளாக திரட்டி தொகுக்கப்பட்டுள்ளது. 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் இன்று வெளியிட்டார்.
மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி, பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று வெளியிட்டு பேசிய பிரதமர், "தன்னிலமற்ற சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் பாரதியார்” என்று குறிப்பிட்டார். பிரதமர் பேசியதாவது, "நாட்டின் முக்கிய தேவைகளை மனதில் வைத்து தொலைநோக்குப் பார்வையுடன் உழைத்தவர் சுப்ரமணிய பாரதி. பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவர் ஓய்வின்றி பங்களிப்பு அளித்தவர்.
பாரதியாரின் புகழ் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியைக் கடந்தும் பரந்து விரிந்துள்ளது. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், தன்னுடைய வாழ்வை பாரதத் தாயின் தன்னிலமற்ற சேவைக்காக அர்ப்பணித்தவர்” என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.