» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி: சொகுசு விடுதி விடுதி உரிமையாளர் கைது

திங்கள் 18, நவம்பர் 2024 8:40:47 AM (IST)

மங்களூரு அருகே, தனியார் சொகுசு விடுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விடுதி உரிமையாளர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் குருபரஹள்ளி 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நிஷிதா(21). இவரது தோழிகள் மைசூரு ராமானுஜ சாலையில் உள்ள கே.ஆர்.மொகல்லாவை சேர்ந்த பார்வதி(20) மற்றும் கீர்த்தனா(21). இவர்கள் மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தனர்.

இந்தநிலையில், 3 பேரும் நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உச்சிலா கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு தனியார் சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று காலை 8.30 மணி அளவில் மாணவிகள் 3 பேரும் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். 

அதையடுத்து அவர்கள் அங்கிருந்த விடுதி ஊழியரிடம் தங்களுக்கு குடிக்க காபி கேட்டுள்ளனர். அதன்பேரில் விடுதி ஊழியர் காபி எடுக்க சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நிஷிதா பாதுகாப்பு உடை அணியாமலும், ரப்பர் மிதவையை பயன்படுத்தாமலும் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார். 

இதனால் அவர் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த பாா்வதி, நிஷிதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீர்த்தனா, தனது தோழிகள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் நீரில் மூழ்கினார். இவ்வாறாக 3 பேரும் 3 நிமிடங்களுக்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதற்கிடையே அங்கு காபி எடுத்து வந்த விடுதி ஊழியர், மாணவிகள் 3 பேரும் நீச்சல் குளத்தில் பிணமாக மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விடுதி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது 3 மாணவிகளும் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அவர்கள் பதறிப்போயினர். 

பின்னர் அவர்கள் இதுபற்றி உல்லால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மாணவிகள் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் தனியார் சொகுசு விடுதிக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது நீச்சல் குளம் அருகே பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததும், நீச்சல் குளத்தின் ஆழம் குறித்த தகவல்கள் அங்கு இல்லாமல் இருந்ததும், நீச்சல் வீரரோ அல்லது பயிற்சியாளரோ அங்கு இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அப்போது மாணவிகள் நீச்சல் குளத்தில் இருந்தபடி வீடியோ எடுத்தது, பின்னர் ஆழமான பகுதிக்கு ஒருவர் சென்றதும், அவரை காப்பாற்ற மற்ற மாணவிகள் சென்றதும், நீச்சல் தெரியாததால் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து இதுபற்றி விடுதி உரிமையாளர் மனோகர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் உல்லால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளர் மனோகர் உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

மேலும் விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மைசூருவில் இருந்து மங்களூருவுக்கு வந்து தங்களின் மகள்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். அது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதற்கிடையே மாணவிகள் 3 பேரும் 3 நிமிடத்துக்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகளைப் பார்த்த பலரும் தங்கள் பரிதாப கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory