» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கக்கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதன் 13, நவம்பர் 2024 1:14:57 PM (IST)
குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டத்தை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள், தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது, அதிகாரிகளே, நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி, அவர்களது வீடுகளை இடித்துத்தள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வெளியிட்டிருக்கிறது. நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறை கொண்ட விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் வீடு முறையான அறிவிப்பு இல்லாமல் இடிக்கப்படும்போது, அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு, அதற்கான இழப்பீடு கோரும் நிலை ஏற்படும்.
வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு. அது கலைந்து போய்விடக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். ஆக்ரமிப்புக் கட்டடங்களை இடிக்கும்போதும், முன்கூட்டியே 15 நாள்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கிய பிறகே செயல்படுத்த வேண்டும். நோட்டீஸ் மீது பதிலளிக்கத் தவறினால், மாநில அரசின் அனுமதியுடன்தான் வீடு இடிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.