» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரையைக் கடந்தது டானா புயல் : ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை!

வெள்ளி 25, அக்டோபர் 2024 12:43:53 PM (IST)



வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல் கரையைக் கடந்தது. நேற்று இரவு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை கரையைக் கடந்தது. 

வடக்கு ஒடிசா கடற்கரை அருகே உள்ள பிதர்கனிகா மற்றும் தாமரா இடையே அதிகாலையில் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 120 கி.மீ பலத்த காற்றுவீச தீவிர புயலாகக் கரையைக் கடந்தது. 6 மணி நேரம் புயல் கரையைக் கடந்தது இதனால் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோர் மாவட்டங்களில் இப்போதும் கனமழை பெய்து வருகிறது.

தீவிரப் புயல் கரையைக் கடந்த நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, முற்பகலில் புயலாக நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டானா புயல் காரணமாக ஒடிசாவின் 3 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. 14 மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் அரசு தங்க வைத்திருந்தது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவின் புரியில் உள்ள 12-ம் நூற்றாண்டு ஜெகன்நாதர் கோயிலை டானா புயல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் புயலுக்குப் பிந்தைய மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மோகன் சரண் மாஜி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். புயல் கரையைக் கடந்த நிலையில் சேத விவரங்கள் குறித்தும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் ராஜீவ் பவனில் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஒடிசாவில் புயல் பாதிப்புள்ள பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்துவிட்டதால் ஒடிசாவின் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் காலை 8 மணி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

ஒடிசா உதவி எண்கள்: பாலாசோர்: 06782-262286 / 261077 மயூர்பஞ்ச்: 06792-252759 / 252941 பத்ரக்: 06784-251881 ஜஜ்பூர்: 06728-222648 கேந்திரப்பா: 06727-232803 கியோன்ஜார்: 06766-255437 ஜகத்சிங்பூர்: 06724-220368 கட்டாக்: 0671-2507842 தேன்கானால்: 06762-226507 / 221376 புரி: 06752-223237 BMC (BBSR) கட்டணமில்லா சேவை எண்-1929 அவசர உதவி என்: 112 ஆகிய புயல் பாதிப்பு தொடர்பான உதவி எண்களை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்திலும் மழை: டானா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ஹவுராவில் உள்ள மாநில அவசர காலக் கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்த முதல்வர் மம்தா, புயலின் நகர்வுகளைக் கவனித்து அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுதல் போன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory