» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அக்டோபர், நவம்பரில் 6,556 சிறப்பு ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

வியாழன் 10, அக்டோபர் 2024 5:14:43 PM (IST)

துர்காபூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழாவையொட்டி அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களில் 6,556 சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழா அடுத்தடுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து ரயில்களும் நிரம்பி, காத்திருப்போர் அதிகளவு உள்ளது. இதனால், சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

இதன்படி, துர்காபூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழாவையொட்டி அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும் 6,556 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் வரும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், நடப்பாண்டு மிக அதிகபடியான பயணிகள் ரயில் போக்குவரத்தை நாடி வந்திருப்பதால், எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்தாண்டு இதே பண்டிகைகளுக்காக 4,429 சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கியது. தற்போது அதிலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த துர்காபூஜை, தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள், உத்திரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து மிக அதிகபடியான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களில் சூரிய பகவானை வழிபடும் சாத் திருவிழாவை கொண்டாட புறப்படுகின்றனர். இதனால், இந்த தென் மாநிலங்களில் இருந்தும், டெல்லி, அரியானா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மாநிலங்களில் இருந்து அதிக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வேயை பொருத்தளவில், சென்னை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆயுதப்பூஜை, தீபாவளி விடுமுறைக்கு மக்கள், நெருக்கடி இன்றி பயணிக்க வசதியாக இம்மார்க்கங்களில் இதுவரை 44 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த ரயில்கள், 394 முறை இயக்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டில் 21 சிறப்பு ரயில்கள், 78 முறை மட்டும் இயக்கப்பட்டது. தற்போது அதைவிட 3 மடங்கு அதிகபடியான பயணங்களை சிறப்பு ரயில்கள் மேற்கொள்கின்றன.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், `அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு 6,556 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் குறிப்பிடும் படியாக கொச்சுவேலி-நிஜாமுதீன், சென்னை-சந்திரகாஞ்சி, தாம்பரம்-ராமநாதபுரம், திருச்சி-தாம்பரம், தாம்பரம்-கோவை, திருநெல்வேலி-சாலிமர், ஈரோடு-சம்பல்பூர், கோவை-தன்பாத், கோவை-சென்னை எழும்பூர், சென்னை-நாகர்கோவில், மதுரை-கான்பூர், கொச்சுவேலி-லோக்மான்யதிலக், கொல்லம்-விசாகப்பட்டினம் போன்ற வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

இந்த ரயில்களில் எதிர்பார்த்த அளவை விட அதிகபடியான பயணிகள் பயணிக்கின்றனர். இதனால், இன்னும் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். எனவே, பண்டிகை கால பயணத்திற்கு சிறப்பு ரயில்களின் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory