» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முதல் அமைச்சர்பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா: டெல்லி அரசியலில் திடீர் பரபரப்பு
திங்கள் 16, செப்டம்பர் 2024 8:36:15 AM (IST)
முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு கைது செய்தது. இந்த ஊழலில் நடந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் உள்ளே வந்தது. அதைத்தொடர்ந்து இந்த விசாரணை மேலும் தீவிரம் அடைந்தது.
இதில் ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மதுபான நிறுவனங்களின் அதிபர்கள், இடைத்தரகர்கள் என பலரும் ஏராளமானோர் கைதாகினர். மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் தவிர தெலுங்கானா முன்னாள் முதல்அமைச்சர்சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதாவும் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைகேட்டில் உச்சபட்ச நடவடிக்கையாக டெல்லி முதல்அமைச்சர்கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜூன் 1-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி மே 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் பின்னர் ஜூன் 2-ந் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார். பின்னர் இந்த வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் மதுபானக்கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை ஜூன் 26-ந் தேதியே சி.பி.ஐ. கைது செய்திருந்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. கைது செய்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோட்டை அவர் அணுகினார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு கடந்த 13-ந் தேதி ஜாமீன் வழங்கியது. அன்று மாலையிலேயே அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அதேநேரம் அவர் தலைமை செயலகத்துக்கு செல்லக்கூடாது, கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்து இருந்தது.இதனால் கெஜ்ரிவால் பதவியில் நீடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடமும், டெல்லி மக்களிடமும் எழுந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்அமைச்சர்பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் நேற்று திடீரென அறிவித்தார். சிறையில் இருந்து வந்தபின் நேற்று முதல் முறையாக தனது மனைவியுடன் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர், அங்கே தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது: டெல்லி முதல்அமைச்சர்பதவியில் இருந்து அடுத்த 2 நாட்களில் விலகப்போகிறேன். நான் நேர்மையானவன்தானா? என மக்களிடம் கேட்கப்போகிறேன். அவர்கள் பதில் அளிக்கும் வரை முதல்அமைச்சர்நாற்காலியில் அமரமாட்டேன்.
மக்கள் எனக்கு நேர்மைக்கான சான்றிதழ் தரும் வரை முதல்அமைச்சர்பதவியை ஏற்கமாட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு அக்னிபரீட்சையில் ஈடுபட வேண்டும். அடுத்த ஓரிரு நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும். அதில் புதிய முதல்அமைச்சர்தேர்ந்தெடுக்கப்படுவார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும். ஆனால் இந்த தேர்தலை நவம்பர் மாதம் நடைபெறும் மராட்டிய தேர்தலுடன் இணைத்து நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. டெல்லி மக்களுக்கு சிறந்த பள்ளிகள், இலவச மின்சாரத்தை வழங்க அவர்களால் முடியவில்லை. ஏனெனில் அவர்கள் ஊழல்வாதிகள், நாங்கள் நேர்மையாளர்கள்.
பா.ஜனதா அல்லாத முதல்-மந்திரிகள் மீது அவர்கள் பொய் வழக்கு போடுகிறார்கள். முதல்-மந்திரிகள் யாரும் கைது செய்யப்பட்டால், பதவி விலக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சிறையில் இருந்தே அரசை நடத்துங்கள்.
மதுபானக்கொள்கை வழக்கில் என்னை கைது செய்தபிறகு நான் பதவி விலகவில்லை. ஏனெனில் நான் ஜனநாயகத்தை மதிக்கிறேன். அரசியல் அமைப்பு சட்டம்தான் எனக்கு மிகவும் உயர்ந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு வெறும் 49 நாட்கள் பதவியில் இருந்த நான், லோக்பால் மசோதாவுக்காக பதவி விலகினேன். அப்போது எனது கொள்கைக்காக விலகினேன். எனக்கு அதிகாரம் மீது மோகம் இல்லை.
மதுபானக்கொள்கை வழக்கு நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படுகிறது. நான் குற்றவாளியா அல்லது நிரபராதியா என டெல்லி மக்களிடம் கேட்க விரும்புகிறேன். நான் நிரபராதி என நீங்கள் நினைத்தால், தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள். எனக்கு பா.ஜனதா முக்கியமல்ல, டெல்லி மக்கள்தான் முக்கியம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.