» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சசி தரூர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
புதன் 11, செப்டம்பர் 2024 11:26:17 AM (IST)
பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசி மத உணர்வுகளை புண்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் பேசுகையில், "பிரதமர் மோடி சிவலிங்கம் மீது அமர்ந்திருக்கும் தேள் போன்றவர் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மிகச்சிறந்த முறையில் ஒப்பிட்டு உருவகப்படுத்தியுள்ளார்' என்றார்.
இதைத்தொடர்ந்து தில்லி விசாரணை நீதிமன்றத்தில் சசி தரூருக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் பப்பர் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "சசி தரூரின் கருத்துகள் கோடிக்கணக்கான சிவ பக்தர்களின் உணர்வுகளை முழுமையாக அலட்சியப்படுத்தியுள்ளது. அவரின் கருத்துகள் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.
இந்த மனு மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். எனினும் விசாரணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சசி தரூர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சசி தரூர் தரப்பில் வழக்குரைஞர் முகமது அலி கான் ஆஜராகி வாதிடுகையில், "கடந்த 2012-ஆம் ஆண்டு ஆங்கில மாத இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள்காட்டியே 2018-ஆம் ஆண்டு பெங்களூரு நிகழ்ச்சியில் சசி தரூர் பேசினார்' என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "சசி தரூர் மேற்கோள்காட்டியது பிரதமரை தேளுடன் உருவகப்படுத்தி தெரிவித்த கருத்தேயாகும். இது சம்பந்தப்பட்ட நபர் (பிரதமர் மோடி) மிகுந்த சக்திவாய்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. இதற்கு ஏன் ஒருவர் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என்பது புரியவில்லை' என்று தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து சசி தரூரின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு டெல்லி அரசு மற்றும் புகார்தாரரான ராஜீவ் பப்பருக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர். மேலும் சசி தரூருக்கு எதிரான வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்கவும் நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.