» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எனது கட்டிடம் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன் - நடிகர் நாகார்ஜுனா

சனி 24, ஆகஸ்ட் 2024 9:48:21 PM (IST)



விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி N-Convention அரங்கு இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நிவாரணம் கோரப்போவதாகவும் நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

அந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன். நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை; ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்துள்ளார்.

பின்னணி: நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N-Convention மையத்தை ஹைதாராபாத் பேரிடர் மேலாண்மை முகமை இடித்தது. மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும்.

N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

N Convention அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கடந்த ஜூலை 17-ல் தான் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இயங்க ஆரம்பித்த பின்னர் மேற்கொள்ளப்படும் முதல் பெரிய நடவடிக்கையாக இது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory