» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 11:36:40 AM (IST)
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 'எஸ்.எஸ்.எல்.வி., - டி3' ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, புவியை கண்காணிக்கும், 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை சுமந்தபடி, 'எஸ்.எஸ்.எல்.வி., - டி3' ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக் கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ. ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், 'எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்' ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன.
விண்கலத்தில் இடம் ற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன. இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது. ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்வோரை கண்காணிக்கும் பணியிலும் இ.ஒ.எஸ்,., செயற்கைக் கோள் ஈடுபட உள்ளது. மிக துல்லியமான மற்றும் அத நவீன கருவிகள் உள்ளிட்டவை செயற்கைக் கோளில் உள்ளன.