» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செங்கோட்டையில் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 12:05:34 PM (IST)

டெல்லி  செங்கோட்டையில் நடைபெற்ற நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11-வது முறையாக பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; "சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். 

விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களை போல நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காகப் பலர் உழைத்து வருகின்றனர்.

வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். இயற்கை பேரிடர்களால் உறவை இழந்தவர்களுக்கு தேச மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள்.

இந்தியாவை வல்லரசாக்கும் கனவை 2047க்குள் நிறைவேற்ற வேண்டும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். 

இந்திய இளைஞர்கள் இப்போது மெதுவாக நடக்க விரும்பவில்லை. துள்ளிக் குதித்து, புதிய இலக்குகளை அடையும் மனநிலையில் உள்ளனர். இந்தியாவிற்கு இது பொற்காலம் என்று கூற விரும்புகிறேன். உலக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும், இது பொற்காலம். 

இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன. வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தார். அங்கு அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

செங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார், எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி முழுவதும் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படையினர், உளவு பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory