» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாடு நிலச்சரிவுக்கு உலக வெப்பமயமாதலே காரணம்: ஆய்வில் தகவல்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 5:50:17 PM (IST)

கேரள வரலாற்றில் மிக மோசமான வயநாடு நிலச்சரிவுக்கு உலக வெப்பமயமாதலே காரணம் என்று விஞ்ஞானிகளின்  ஆய்வில் தெரியவந்துள்ளது. .

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பல காரணிகள், உலக வெப்பமயமாதலின் வேகத்தை அதிகரித்து, அதனால், திடீரென அதிக கனமழை, 10 சதவீதம் கூடுதலாக பெய்து, வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 231 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்ததாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

ஜூலை 29 - 30ஆம் தேதி இரவு, இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, ஆங்காங்கே பல இடங்களில் நேரிட்ட நிலச்சரிவு, முண்டக்கை மற்றும் சூரல்மலை என இரண்டு கிராமங்களை துடைத்தெடுத்துச் சென்றிருக்கிறது. மலையின் ஒரு பகுதியே மறைந்துபோயிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, ஸ்வீடன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆறு விஞ்ஞானிகள் என 24 விஞ்ஞானிகள் கொண்ட உலக வானிலை மாற்றங்களை ஆய்வு செய்யும் குழு நடத்திய ஆய்வில், கேரள வரலாற்றில் மிக மோசமான வயநாடு நிலச்சரிவுக்கு உலக வெப்பமயமாதலே காரணம் என்று கூறியிருக்கிறது.

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வானிலை மாற்றங்களின் காரணமாக, வழக்கமான மழையைப்போல அல்லாமல் 10 சதவீதம் தீவிர மழைப்பொழிவு காரணமாக, நிலச்சரிவு நேரிட்டதாக துரித ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எதிர்காலத்தில் உலகின் வெப்பநிலையானது இயல்பை காட்டிலும் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துக் காணப்படும் என்றும், இதனால், மழையின் தீவிரம் வழக்கமான அளவைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, உலக வெப்பநிலையில் ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் உயர்விற்கும், வளிமண்டலத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறன் 7 சதவிகிதம் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் கடுமையான மழையை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. கேரளத்தில் கனமழையை ஏற்படுத்தும் புவி வெப்பமடைதலின் தாக்கத்தை கணக்கிடுவதற்காக, விஞ்ஞானிகள் குழுவானது, வானிலை தரவு மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட காலநிலை மாதிரிகளை பகுப்பாய்வு செய்தது.

மேலும் தொழில்துறைக்கு முந்தைய காலநிலை மற்றும் தற்போதைய காலநிலை ஆகியவற்றில் இருந்து, தற்போது வானிலை தரவுகள் எந்த அளவுக்கு மாறியுள்ளன என்பதை ஒப்பிட்டு, சக மதிப்பாய்வு முறைகளையும் பயன்படுத்தியது. அதில், கிட்டத்தட்ட 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல், வடக்கு கேரளத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 24 மணிநேர மழைப்பொழிவு நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறது.

இங்கே வெளியிடப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள் அனைத்தும், காலநிலை அறிவியலால் கணிக்கப்பட்டவற்றுடன் தரவுகள் அடிப்படையில் ஒத்துப்போகின்றன. ஒருபக்கம் உலக வெப்பமயமாதல், மறுபக்கம் மனிதர்கள் வனம் போன்ற இயற்கை அமைப்புகளைத் தொடர்ந்து பாழ்படுத்துதல் போன்றவை, இந்தியாவில் உள்ள மக்களுக்கு நேரடியாக இயற்கை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவே செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், வயநாடு பகுதியில் இருந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலச்சரிவை தடுக்கும் முக்கிய காரணியாக இருந்த வனப்பரப்புகள் 62 சதவீதம் வயநாடு மாவட்டத்தில் அழிக்கப்பட்டு, அங்கு கட்டடமைப்புகள் உருவாக்கப்பட்டது, நிலச்சரிவு ஏற்பட வழிவகுத்துள்ளன. அதாவது, 1950 முதல் 2018ஆம் ஆண்டுகாலத்தில் 62 சதவீத வனப்பரப்பு அழிக்கப்பட்டு, அங்கு 1800 சதவீதம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

இதனால், மலைகளின் நிலைத்தன்மை ஆட்டம் கண்டுவிட்டது. இதனால், வயநாடு மாவட்டம் கடந்த 2012ஆம் ஆண்டே பாதிக்கப்பட்டது. ஆனாலும் தேயிலைத் தோட்டத்தின் விரிவாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. மிகப்பெரிய அச்சுறுத்தல்களையே எச்சரித்தும் நிறுத்தாத நிலையில், மறுபக்கம் சுரங்கப் பணிகளும் தொடங்கின. இயற்கைக்கு எதிராக மனிதர்களின் சில சட்டவிரோத சுரங்கப் பணிகளும் தற்போது இயற்கையுடன் சேர்ந்துகொண்டு மனிதர்களுக்கு எதிராகக் களமிறங்கிவிட்டன என்கிறது ஆய்வு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory