» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:46:00 PM (IST)
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையிடம், "செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன" என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, முதல் வழக்கில் 21 சாட்சிகளும் 2-வது வழக்கில் 100 சாட்சிகளும், 3-வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக பதில் அளித்தது. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, "தமிழக அரசு விசாரணையை தாமதப்படுத்துகிறது. வாய்தா கேட்காவிட்டால் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில், "இது ஒரு ஜாமீன் கோரும் வழக்கு. செந்தில் பாலாஜி, அமைச்சர் மற்றும் அதிகாரத்தில் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு ஜாமீன் தர வேண்டும். விசாரணை நிறைவு பெறும் வரை ஒருவரை சிறையில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் கூறி உள்ளது. மற்றபடி வழக்கு விசாரணை நடைபெறுவதை வேறு ஒரு தனி வழக்காகத்தான் பார்க்க வேண்டும்.
செந்தில் பாலாஜி 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.