» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹிண்டன்பர்க் நிறுவனம் சொல்வது பொய்: செபி தலைவர், அதானி குழுமம் மறுப்பு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 10:49:51 AM (IST)
அதானி நிதி முறைகேடு நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டை ‘செபி’ தலைவர் மறுத்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது.இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று கூறியது.
2020-ம் ஆண்டில் இருந்து அதானி குழுமத்தின் 13 வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக ‘செபி’ தெரிவித்தது.இதற்கிடையே, நிதி முறைகேட்டுக்காக அதானி குழுமம் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், ‘செபி’ தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது: செபி தலைவரும், அவரது கணவரும் வைத்துள்ள முதலீடுகள், கடந்த 2015-ம் ஆண்டிலேயே செய்யப்பட்டுள்ளன. அப்போது, மாதபி புரி புச், ‘செபி’யின் முழுநேர உறுப்பினராக ஆகவில்லை. ஆனால், ‘செபி’ தலைவர் பதவியை ஏற்ற 2 வாரங்களில் தனது பெயரிலான பங்குகளை தன்னுடைய கணவர் பெயருக்கு மாதபி புரி புச் மாற்றிவிட்டார்.
அவர் பங்குகள் வைத்திருந்த அதே நிறுவனத்தில் கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானியும் முதலீடு செய்துள்ளார். அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் பயன்படுத்திய பெர்முடாவை சேர்ந்த குளோபல் ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் என்ற நிறுவனம் வைத்திருந்த துணை பங்குகளில் மாதபி புரி புச்சும், அவருடைய கணவரும் 2015-ம் ஆண்டு முதலீட்டாளர்களாக இருந்தனர்.
மாதபி புரி புச்சும், அவருடைய கணவரும் முதலில் 2015-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி சிங்கப்பூரில் ஐ.பி.இ. பிளஸ் பண்ட்1 என்ற நிறுவனத்தில் கணக்கு தொடங்கினர். ஐ.பி.இ. பண்ட் என்பது வினோத் அதானியால் தொடங்கப்பட்ட சிறிய மொரீஷியஸ் நிறுவனம் ஆகும்.மின் சாதனங்களின் விலையை அதிகமாக எழுதி ஈட்டிய வருமானத்தை இந்திய சந்தைகளில் முதலீடு செய்ய இந்த நிறுவனத்தை வினோத் அதானி பயன்படுத்தினார்.
இந்த தொடர்புகளால்தான், அதானி குழுமத்தின் மொரீஷியஸ் மற்றும் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் குறித்த விசாரணையில் ‘செபி’ ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.
இந்நிலையில், அதற்கு ‘செபி’ தலைவர் மாதபி புரி புச், அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்றது. முற்றிலும் பொய். எங்கள் வாழ்க்கையும், நிதி விவரங்களும் திறந்த புத்தகம். கடந்த சில ஆண்டுகளாக, தேவையான அனைத்து தகவல்களையும் ‘செபி’யிடம் ஒப்படைத்துள்ளோம்.
நாங்கள் தனிநபர்களாக இருந்த காலம் தொடர்பான அனைத்து நிதி ஆவணங்களையும் எந்த விசாரணை அமைப்பாவது கேட்டால், அவற்றை கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக ‘செபி’ நடவடிக்கை எடுத்தது. நோட்டீசும் அளித்தது. அதற்கு பதிலடியாக, அந்நிறுவனம் எங்கள் நற்பெயரை கொலை செய்யும் முயற்சியில் இறங்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதானி குழுமம்
மேலும், அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தீய உள்நோக்கம் கொண்டவை. பொய்யானவை. பொதுவெளியில் உள்ள தகவல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மறுசுழற்சி செய்து கூறியுள்ள அந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்.
எங்களது வெளிநாட்டு மூலதன கட்டமைப்புகள் வெளிப்படையானவை. உரிய விவரங்கள் அனைத்தும் பொது ஆவணங்களில் தெரிவிக்கப்படுகின்றன. உரிய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட உறுதி பூண்டுள்ளோம். ‘செபி’ தலைவருடனோ, அவரது கணவருடனோ எங்களுக்கு எவ்வித வர்த்தக உறவும் கிடையாது. இவ்வாறு அதானி குழுமம் கூறியுள்ளது.
இதற்கிடையே, ‘செபி’ தலைவர் மாதபி புரி புச்சும், அவருடைய கணவரும் நேற்று மாலை மற்றொரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் ஐ.ஐ.எப்.எல். வெல்த் மேனேஜ்மெண்டுக்கு சொந்தமான நிறுவனத்தில் 2015-ம் ஆண்டு முதலீடு செய்தோம். அதாவது, நான் (மாதபி புரி புச்) செபியின் முழு நேர உறுப்பினராக சேருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்தோம்.
சிங்கப்பூரை சேர்ந்த தனிநபர்கள் என்ற அடிப்படையில்தான் எங்களது முதலீடு அமைந்தது. தவல் புச்சின் சிறுவயது நண்பர் அனில் அகுஜாவின் அறிவுரையின்பேரில், 2 நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவு செய்தோம். எந்த காலகட்டத்திலும் அந்த நிறுவனம், அதானி குழுமத்துக்கு சொந்தமான எந்த பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்தது இல்லை.
நான் 2 நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்தேன். நான் ‘செபி’ தலைவர் பதவியை ஏற்றவுடன் 2 நிறுவனங்களும் செயலற்றதாகி விட்டன. அவற்றில் இருந்த எனது பங்குகள் குறித்த விவரம், ‘செபி’க்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நிறுவனங்களில் நான் ஈட்டிய வருமானத்தை தற்போதைய எனது ஊதியத்துடன் முடிச்சு போடுவது சரியல்ல.
ஹிண்டன்பர்க் அறிக்கை உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. செபியின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பதாக உள்ளது. ‘செபி’ அமைப்பில் அனைத்து விதிமுறைகளும் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படுவது இல்லை. அதன் வாரியம்தான் ஒப்புதல் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.