» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாட்டில் மீட்பு பணிகள் தொடர்கிறது: நகை, பணம் திருடு போவதாக புகார்!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:01:43 PM (IST)

வயநாடு பயங்கர நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்தது. ஒரு வாரமாக தொடர்ந்து தேடும் பணி நடந்தது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது.

நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள். நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. ராணுவம், கடற்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து 6 பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் வழியாக செல்லும் சாலியாற்றிலும் தீவிர தேடுதல் பணி நடந்தது.

நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன. அத்துடன் அதிகம் பேர் அங்கு கூடுவதால், மீட்பு பணியில் சிரமம் ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்கள் உாிய விவரங்களை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி, நேற்று ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 1,500 பேர் மட்டுமே பெய்லி பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். நவீன கருவியான ரேடார் சிக்னல் அடிப்படையில் மண்ணில் புதைந்தவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என தேடப்பட்டது. உடல்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகளுடன் தேடும் பணி நடந்தது. 

பாறைகள், மரங்களுக்கு அடியில் உடல்கள் புதையுண்டு உள்ளதா என தேடும் பணி நடைபெற்றது. மேலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாறைகள், மரங்கள் அகற்றப்பட்டு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 402 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமத்தில் 671 குடும்பங்களை சேர்ந்த 2,162 பேரும், முண்டக்கையில் 451 குடும்பங்களை சேர்ந்த 1,247 பேரும், அட்டமலையில் 601 குடும்பங்களை சேர்ந்த 1,424 பேரும் என மொத்தம் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory