» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து: ரூ.5,875 கோடி வருவாய் அதிகரிப்பு!

புதன் 3, ஏப்ரல் 2024 11:57:33 AM (IST)

மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ததால் ரயில்வே வாரியத்திற்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது. இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி பயணிக்கின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரயில்வே பதில் அளித்துள்ளது. அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம், மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள். கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரயில்வே வழங்கியது.

சலுகை ரத்து செய்யப்பட்டபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.

இருப்பினும், ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இதற்கு நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒவ்வொரு ரயில் பயணிக்கும் ரயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை இந்திய ரயில்வே வழங்கி வருவதாக கூறுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய வைஷ்ணவ், ஒரு இடத்திற்கு செல்ல ரயில் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால், ரயில்வே 45 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிப்பதாகவும், 55 ரூபாய் சலுகை அளிப்பதாகவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory