» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

‘இந்தியா’ கூட்டணி 272 தொகுதிகளை தாண்டி வெற்றிபெறும் : காங்கிரஸ் உறுதி

திங்கள் 25, மார்ச் 2024 9:58:06 AM (IST)

இந்தியா’ கூட்டணி பிளவுபடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒ கூறியதாவது: ‘இந்தியா’ கூட்டணி பிளவுபடவில்லை. டிசம்பர் 19ந் தேதிவரை 28 கட்சிகளும் ஒற்றுமையாக இருந்தன. பின்னர், நிதிஷ்குமார் ‘பல்டி’ அடித்தார். மம்தா பானர்ஜி, தனித்து போட்டியிட விரும்பினார். இந்த 2 சம்பவங்கள்தான் நடந்துள்ளன.

மற்றபடி, ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய போகிறோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது.

நிதிஷ்குமார் விலகியதால், கூட்டணி உடைந்து விட்டதாக அர்த்தம் அல்ல. மம்தா பானர்ஜி தொகுதி பங்கீடு செய்யாவிட்டாலும், ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளார். நிச்சயமாக இந்த தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறும்.

டெல்லி முதல்மந்திரி அரவிந்்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தை ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக பிரதமர் மோடி சித்தரிப்பார் என்பது உண்மைதான். ஆனால், ஊழலுக்கு எதிரான அவரது முழக்கம், வெற்று முழக்கம்தான்.

ஏனென்றால், தேர்தல் பத்திர திட்டம், பிரதிபலன் கருதி பயன்படுத்தப்பட்டு இருப்பது தெளிவாகிறது. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 30 கம்பெனிகள் இணைந்து ரூ.330 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கி இருப்பதற்கான ஆதாரங்களை அளித்துள்ளோம்.

4 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களுக்கும், ரூ.4 லட்சம் கோடி காண்டிராக்டுகள் அளிக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது. ஒரு பா.ஜனதா எம்.பி., தனக்கு உள்கட்டமைப்பு காண்டிராக்ட் அளிக்கப்பட்டவுடன் தேர்தல் பத்திரம் வாங்கி உள்ளார்.

எனவே, அரசு காண்டிராக்டுகளுக்கும், விசாரணை அமைப்புகளின் சோதனைக்கும், தேர்தல் பத்திரங்களுக்கும் தெளிவான தொடர்பு உள்ளது.காங்கிரஸ் கட்சியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், எங்களிடம் விசாரணை அமைப்புகள் இல்லை. அரசு காண்டிராக்ட் அளிக்க இயலாது.

ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும், பிரியங்கா ரேபரேலியும் போட்டியிடுவார்களா என்று கேட்கிறீர்கள். ராகுல்காந்தி, தன்னை விசுவாசமான வீரன் என்று கூறியுள்ளார். கட்சியின் தேர்தல் குழு கேட்டுக்கொண்டால் அவர் அமேதியில் போட்டியிடுவார்.

தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மறுப்பதாக கூறுவது தவறு. போட்டியிடுமாறு கூறியும், எந்த தலைவரும் மறுத்ததாக தெரியவில்லை.கட்சியை ராகுல்காந்தி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். பாரத ஒற்றுமை யாத்திரைகள் நடத்தி உள்ளார். வேறு எந்த தலைவரும் இப்படி நடத்தியது இல்லை. அவரது அரசியல் மாறுபட்டது. கட்சிக்கு புதிய ஆற்றலை புகுத்தி இருக்கிறார். யாத்திரை நடத்திய பிறகு அவரை விமர்சகர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

INDIANSMar 25, 2024 - 10:37:27 AM | Posted IP 172.7*****

THE BEST COMEDY

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory