» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 11, டிசம்பர் 2023 12:35:05 PM (IST)
ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு தீர்ப்பு வழங்கினார். பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் ஒரு தீர்ப்புகள் வழங்கினர். மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்குள் நாங்க செல்ல விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். என்றபோதிலும் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். லடாக்கை மறுசீரமைப்பு யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தீர்ப்பின்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியதாகவது:-
1. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது.
2. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை.
3. இந்தியா உடன் இணைந்தபோது இறையாண்மையின் ஒரு பகுதியை தக்க வைத்துக்கொள்வில்லை.
4. ஜனாதிபதி ஆட்சி நடைபெறும்போது மாற்ற முடியாத அதிகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
5. மத்திய அரசிற்கான அரசியலமைப்பு சட்டம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும்.
6. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.
7. காஷ்மீருக்கு தனி ஆட்சி உரிமை கிடையாது.
8. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு.