» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை மீட்க சுரங்கம் தோண்டும் நிபுணர்கள் வருகை

செவ்வாய் 28, நவம்பர் 2023 11:26:28 AM (IST)



உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் நவீன கருவிகள் உதவியின்றி சுரங்கம் தோண்டும் 6 நிபுணர்கள் வருகை தந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க பாதை பணி நடந்து வந்தது. கடந்த 12ம் தேதி ஒரு பகுதியில் திடீரென மண் சரிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தொழிலாளர்களை மீட்க அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் கொண்டுவரப்பட்டு கிடைமட்டமாக துளையிடும் பணி நடந்து வந்தது.

அப்போது ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களை மீட்டு வெளியே கொண்டுவர ராணுவ பொறியாளர்கள் நேற்று முன்தினம் முதல் சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்கினர். மொத்தம் 86 மீட்டருக்கு துளையிட்டு சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து தொழிலாளர்களை வெளியே கொண்டுவர 1.2 மீட்டர் விட்டத்தில் குழாய்கள் அமைக்கப்படும்.

செங்குத்து மற்றும் தொழிலாளர்களை வைத்து கிடைமட்டமாக துளையிட்டு மீட்பது ஆகிய இரண்டு முறைகளில் பணியை மேற்கொள்வது ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. பார்கோட் முனையில் இருந்து, கிடைமட்டமாக துளையிடும் இந்நிலையில், ராணுவ பொறியாளர் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி லெப்.ஜெனரல் ஹர்பால் சிங் நேற்று கூறுகையில்,‘‘ தற்போது 31 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது. 

அதே போல் சுரங்கத்தின் முன் பகுதியில் கிடைமட்டமாக துளையிடும் பணியையும் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 800 மிமீ விட்டம் கொண்ட குழாய்களின் சட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.அரை மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை படிப்படியாக முன்னேறுவோம். எந்த தடையும் ஏற்படாவிட்டால்,36 மணி நேரத்துக்குள் 10 மீட்டர் வரை கடந்து விடலாம்’’ என்றார்.

கடந்த 16 நாள்களாக சுரங்கத்தில் சிக்கி தொழிலாளர்கள் சிக்கி தவிக்கும் நிலையில், எலியை போல் துளையிட்டு சுரங்கம் தோண்டும் நிபுணர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று வந்தனர். இடிபாடுகளுக்கு இடையே போடப்பட்ட 880 மிமீ விட்டம் கொண்ட குழாய்கள் வழியாக ஒவ்வொருவராக சென்று நவீன இயந்திரங்கள் இல்லாமல் சுரங்கம் தோண்டி, இடிபாடுகளை அகற்றுவர். இது மிக மெதுவான மற்றும் கடினமான முறையாகும்.

மீட்பு பணிகள் பற்றி நேற்று பேட்டியளித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்.ஜெனரல். சையத் அதா ஹஸ்னைன்,‘‘ எலி துளை சுரங்க பணியாளர்கள் துளையிடும் பணியை விரைவில் ஆரம்பிப்பார்கள். 41 பேரையும் பாதுகாப்பாக மீட்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது. தனியார் மற்றும் பொதுதுறை நிறுவனங்கள் இணைந்து பணியை மேற்கொள்கின்றனர்’’ என்றார். பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா நேற்று வந்து மீட்பு பணியை நேரில் பார்வையிட்டார்.

இதற்கிடையே உத்தரகாண்ட் சுரங்கபாதை திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கும் அதானி குழுமத்துக்கும் சம்மந்தம் இல்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இயந்திரத்தின் மூலம் 46.8 மீ வரை துளையிடப்பட்டது. கிடைமட்டமாக துளையிடும் போது ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. ஆகர் இயந்திரத்தின் உடைந்த பிளேடுகள் ஐதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பிளாஸ்மா கட்டர் கருவி உதவியுடன் நேற்று அகற்றப்பட்டது

தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு மன நல மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இடிபாடுகள் வழியே செலுத்தப்பட்டுள்ள சிறிய மைக் உதவியுடன் வெளியே இருக்கும் உறவினர்கள்,மருத்துவர்களுடன் தினமும் பேசி வருகின்றனர். ஆரம்பத்தில் பழச்சாறுகள்,குளிர்பானங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, முட்டை,பால், டீ, சாதம்,சப்பாத்தி போன்ற உணவு வகைகளும் வழங்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory