» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தோல்வி பயத்தால் சந்திரசேகர ராவ் 2 தொகுதிகளில் போட்டி : பிரமர் மோடி பேச்சு
திங்கள் 27, நவம்பர் 2023 10:07:31 AM (IST)
தோல்வி பயத்தால் சந்திரசேகர ராவ், 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு, சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில், பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேதக் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தோல்வி பயத்தால் தான் சந்திரசேகர ராவ், தற்போது 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். காங்கிரஸாரும் அப்படித்தான். இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரகள். கஜ்வேல் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஈடல ராஜேந்தர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்பதால்தான் சந்திரசேகர ராவ் வேறொரு தொகுதியை தேர்வு செய்து கொண்டார்.
மக்களை சந்திக்காத, தலைமைசெயலகத்திற்கே வராத, பண்ணைவீட்டிலேயே வசதியாக வாழும் ஒரு முதல்வர் நமக்கு தேவையா? சந்திரசேகர ராவ் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளார். அவரை விவசாயிகள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். கடவுளே கூட மன்னிக்கமாட்டார். இதேபோல் தலித் ஒருவரை முதல்வர்ஆக்குவேன் என கூறி தலித் சமுதாயத்தினரையும் அவர் ஏமாற்றி உள்ளார். பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கான பணத்தை கொள்ளையடித்துள்ளார் சந்திர சேகர ராவ். இவ்வாறு பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.
திருப்பதியில் தரிசனம்:
பிரதமர் மோடி நேற்றிரவு ஹைதராபாத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு, தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அங்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, எம்பிக்கள் மிதுன் ரெட்டி, குருமூர்த்தி, ரெட்டப்பா, டிஜிபி ராஜேந்திர நாத், முதன்மை செயலாளர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருமலை சென்றடைந்தார். அங்கு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உட்பட பலர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். இரவு திருமலையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று திங்கட்கிழமை காலை ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். பின்னர் அவர் காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.