» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலி வீடியோக்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள் : மத்திய அமைச்சர்

வெள்ளி 24, நவம்பர் 2023 11:24:45 AM (IST)

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி வீடியோக்கள் தயாரிப்பதை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன.பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன.

போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்றே தொடங்கப்படும். குறுகிய காலத்தில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும். ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ, புதிய சட்டமோ கொண்டு வரப்படும்.

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும், புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory