» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மன்மோகன்சிங்கை போல்மல்லிகார்ஜுன கார்கே ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படுகிறார்: பிரதமர் மோடி

வியாழன் 9, நவம்பர் 2023 10:44:21 AM (IST)

மன்மோகன்சிங்கை போல், மல்லிகார்ஜுன கார்கே ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படுகிறார் என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்தியபிரதேச மாநில சட்டசபை தேர்தல் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள தாமோ நகரில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது: சத்தீஷ்காரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கு மக்கள் ஆட்சியை அளித்தனர். ஆனால் அதன் முதல்-மந்திரிகள், சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்டு கருப்பு பணம் சம்பாதிக்கிறார்கள்.

நான் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். அதை செய்யட்டுமா? வேண்டாமா? காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினால், அந்த கட்சியின் முன்னாள் பிரதமர் கூறியதுபோல், 85 சதவீத கமிஷன் முறை வந்து விடும். கடந்த 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 9-வது இடம், 8-வது இடம், 7-வது இடம், 6-வது இடம் என்று படிப்படியாக முன்னேறியது. அதைப்பற்றி யாருமே பேசவில்லை.

ஆனால், நம்மை 200 ஆண்டுகள் ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, இந்தியா 5-வது இடத்தை அடைந்தபோது எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்தியாவை பார்க்க தொடங்கினர். எனது 3-வது ஆட்சிக்காலத்தில், உலக அளவில் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வருவேன். இன்னும் 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதாக நான் அறிவித்ததை தேர்தல் கமிஷனிடம் முறையிடப்போவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் அந்த பாவத்தை செய்யட்டும். நான் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்வேன். 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆள காங்கிரசுக்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். அந்த காலகட்டத்தில், பிரதமர் என்ன செய்கிறார், பேசுகிறார் என்று மக்களுக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், பிரதமர் செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. ‘ரிமோட்’ மூலம் நாடு இயக்கப்பட்டது.

மன்மோகன்சிங்கை போல், தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘ரிமோட்’ பழக்கம் இன்னும் போகவில்லை. மல்லிகார்ஜுன கார்கே எனது நல்ல நண்பர்களில் ஒருவர். ஆனால், இன்று அவர் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். பெயரளவுக்கு மட்டுமே வைத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் கார்கே, சில நேரங்களில் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவர் வாயில் இருந்து நேர்மறையான வார்த்தைகள் வருவதை பார்த்துள்ளேன். அந்த நேரத்தில், ‘ரிமோட்’ பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போயிருக்கலாம் அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம்.அந்தவகையில், அவர் பாண்டவர்கள் பற்றி பேசியதை படித்தேன். ‘ரிமோட்’ வேலை செய்யும்போது அவர் சனாதன தர்மத்தை வசைபாடுவார். ‘ரிமோட்’ வேலை செய்யாதபோது, அவருக்கு பாண்டவர்கள் நினைவு வரும்.

பா.ஜனதாவில் 5 பாண்டவர்கள் இருப்பதாக கார்கே கூறியுள்ளார். அவர் உண்மை பேசும்போது, எத்தகைய வார்த்தைகள் வருகிறது என்று பாருங்கள். பாண்டவர்கள் பாதையில் நடப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்? இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory