» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மிசோரம் சட்டசபை தேர்தல்: ஓட்டு போடாமல் திரும்பி போன முதல்வர் ஜோரம் தங்கா!

செவ்வாய் 7, நவம்பர் 2023 10:17:26 AM (IST)



மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் முதலமைச்சர் ஜோரம் தங்கா வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது. காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது.

ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிடுகிறார். தனது கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மாநிலத்தின் அரசியல் தன்மையை பொறுத்த அளவில், என்னதான் ஆளும் மிசோ தேசிய முன்னணியுடன் பாஜக தேசிய அளவில் கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்திற்குள் இக்கட்சியுடன் இணைந்து போகமுடியாத நிலைமை உருவாகியுள்ளது. காரணம் மணிப்பூர் கலவரம்தான். மிசோரம் மாநிலத்தின் பூர்வகுடி மக்களுக்கும், மணிப்பூரின் குக்கி இன மக்களுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இப்படி இருக்கையில் மிசோரம் பூர்வகுடி மக்கள் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதனை சமாளிக்கவே பாஜக தற்போது மிசோ தேசிய முன்னணியுடன் இணைந்து பயணிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பிரதமர் மோடியுடன் தான் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய மாட்டேன் என மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த அதிருப்தியை காங்கிரஸ் அறுவடை செய்ய நினைக்கிறது. இருப்பினும் கருத்துக்கணிப்புகளை பார்க்கும்போதும் இங்கு தொங்கு சட்டசபை அமையும் என தெரிய வருகிறது.

இன்று காலை 7 மணி அளவில் திட்டமிட்டபடி வாக்குபதிவு தொடங்கியது. மாநில முதல்வர் ஜோரம் தங்கா, ஐஸ்வால் வடக்கு 2 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு செய்ய சென்றார். ஆனால் அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவரால் வாக்குப்பதிவு செய்ய முடியவில்லை. எனவே வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த அவர், தொகுதிக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து வாக்களிப்பார் என்று சொல்லப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory